'மனம் கொத்திப்பறவை' படத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு படிப்பதற்காகச் சென்ற மலையாள வரவான ஆத்மியா, தற்போது 'வெள்ளை யானை' படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகில் காலடி வைத்துள்ளார்.
அவர் தமிழக திரைச்செய்தி யாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "எனக்கு கவர்ச்சி பிடிக்கும், ஆனால் அதிக கவர்ச்சி என் மேனிக்கு ஒத்துவராது.
"அத்துடன் ரசிகர்களும் என்னை குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் பெண்ணாகவே பார்க்க விரும்புகின்றனர்," என்று கூறியுள்ளார்.
இப்போது சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் 'வெள்ளை யானை' படத்தில் நடித்து வருகிறேன்.
தஞ்சை விவசாயிகளின் வாழ்க்கையைக் கூறும் 'வெள்ளை யானை' படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக எந்த அலங்காரமும் செய்து கொள்ளாமல் நடித்துள்ளேன். இந்தப் படம் வெளியானபின்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
'மனம் கொத்திப் பறவை' படத்திற்கு பின் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என் குடும்பத்தினரும் சினிமாவில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வழிகாட்டவில்லை.
பிஎஸ்சி தாதிமை படிப்பை முடித்ததும் படங்களில் நடிப்பதற்கு ஆசை வந்தது. 'அமீபா' என்ற மலையாளப் படத்தில் நடித்தேன். சினிமாதான் என் வாழ்க்கை என தீர்மானித்ததால் மீண்டும் நடிப்புலகத்திற்கு திரும்பி உள்ளேன்.
முன்பெல்லாம் நிறைய பேருக்கு என் பெயரே தெரியாது. ஆனால், இப்போது வெளியில் யார் பார்த்தாலும் என்னை சிவகார்த்திகேயனுடன் நடித்தவர் தானே என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
'மார்க்கோனி மத்தாக்கி' என்ற மலையாளப் படத்தில் ஜெய்ராம், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்கிறேன். வங்கி ஒன்றை துப்புரவு செய்பவராக நடிக்கிறேன்," என்று கூறியுள்ளார் ஆத்மியா.

