அஜித் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா தற்பொழுது நடிக்க இருக்கிறார். அஜித்தைப்போல நடிக்க இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறுகிறார் அனுஷ்கா. அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய திரையின் கனவுக்கன்னி. 10 ஆண்டுகளாகத் தென்னிந்திய திரைகளில் கோலோச்சி வருபவர். தென்னிந்திய முன்னனி நாயகர்களுடன் நடித்த நாயகி. தனி கதாநாயகியாகவும் நடித்து வெற்றி பெற்றவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் வசூலைக் குவித்த படம்.
'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் கூட்டிய இவர் மிகவும் குண்டாகிவிட்டதால் தன் உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அண்மையில்தான் ஆஸ்திரியாவுக்குச் சென்று உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். தற்போது மாதவன் ஜோடியாக 'சைலன்ஸ்' என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
அஜித், சிம்ரன், சோதிகா நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வாலி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்தப் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு வேடம் காது கேட்காத, வாய்ப் பேச முடியாத வேடம். இந்தப் படத்தில் இவர்தான் வில்லன். இந்தக் கதாபாத்திரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் அஜித் சிறப்பாக நடித்த கதாபாத்திரங்களில் ஒன்று இந்தக் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
'தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில்தான் அனுஷ்கா காது கேளாத, வாய்ப் பேச முடியாத தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

