கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. சாதாரணமாக ஒல்லியாக இருக்கும் கங்கனா ஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையைக் கூட்டி நடிக்க இருக்கிறார். இவருடைய துணிச்சலைப் பாராட்டி இந்தப் படத்தில் நடிக்க அதிக சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல். விஜய் படமாக எடுக்கிறார்.
'தலைவி' படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார். ஆனால் இந்தப் படத்திற்காக கங்கனா தனது உடல் எடையை அதிகரிக்கப் போகிறாராம். ஜெயலலிதா உடல் பூசினாற்போல இருந்தார். கங்கனாவோ ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக உள்ளார். அதனால் ஜெயலலிதாவாக மாற முதலில் தனது உடல் எடையை அதிகரிக்கவேண்டும். அவருடைய இந்த முயற்சியைப் பாராட்டி அவர் கேட்ட ரூ.24 கோடியை சம்பளமாகத் தர முடிவு செய்திருக்கிறது தயாரிப்பாளர் குழு.
கங்கனா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். மேலும் அவர் இந்தியா முழுவதும் பிரபலம். அதனால்தான் அவர் பெரிய தொகையைச் சம்பளமாக கேட்டும் சந்தோஷமாக தருகிறோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
'தலைவி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ளது. கங்கனாவுக்கு ஜெயலலிதாபோல ஒப்பனை செய்வதற்கு அமெரிக்காவில் இருந்து ஒப்பனைக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். கங்கனா தமிழ்க் கற்பதுடன் பரதநாட்டியமும் கற்று வருகிறார். படத்திற்காக தன் உடல் எடையை அதிகரிக்கும் வேலையைக் கங்கனா ஏற்கெனவே துவங்கிவிட்டார்.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை ஏற்றிவிட்டுக் குறைக்க முடியாமல் அவஸ்தைப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரை பார்த்த பிறகு எவ்வளவு பணம் கொடுத்தாலும் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கும் கதாபாத்திரமே வேண்டாம் என்ற முடிவுக்கு அனைத்து நடிகைகளும் வந்துவிட்டனர்.
இந்நிலையில் கங்கனாவோ இந்த விஷப் பரிட்சையில் இறங்கி இருக்கிறார். உடல் எடையை ஏற்றி பின்னர் குறைப்பது எல்லாம் பாலிவுட்டில் சர்வ சாதாரணமாகப் போய்விட்டது.
அதனால் அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது கங்கனாவுக்குப் பிரச்சினையாக இருக்காது. பாலிவுட் பிரபலங்கள் உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்றால் ஆஸ்திரியாவுக்குத்தான் செல்வார்கள். அனுஷ்கா கூட அங்கு சென்றுதான் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கனா பிரதமர் மோடியின் அபிமானியாவார். மோடியின் வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாக வீட்டில் தானே சுடச் சுட பக்கோடாவும் தேநீரும் செய்து குடும்பத்தினருக்கு விருந்தளித்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதுபற்றி கங்கனாவின் தங்கை ரங்கோலி சந்தேல் தன்னுடைய டுவிட்டரில், "கங்கனா சமைப்பது மிகவும் அரிது. மோடி வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதனால் அவரே சமைத்து அருமையான விருந்து அளித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

