அஜித் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா தற்பொழுது நடிக்க இருக்கிறார். அஜித்தைப்போல நடிக்க இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறுகிறார் அனுஷ்கா.
அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய திரையின் கனவுக்கன்னி. 10 ஆண்டுகளாகத் தென்னிந்திய திரைகளில் கோலோச்சி வருபவர். தென்னிந்திய முன்னணி நாயகர்களுடன் நடித்த நாயகி. தனி கதாநாயகியாகவும் நடித்து வெற்றி பெற்றவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்த படம்.
'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் கூட்டிய இவர் மிகவும் குண்டாகிவிட்டதால் தன் உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அண்மையில்தான் ஆஸ்திரியாவுக்குச் சென்று உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். தற்போது மாதவன் ஜோடியாக 'சைலன்ஸ்' என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வாலி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த அந்தப் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு வேடம் காது கேட்காத, வாய் பேச முடியாத வேடம். அந்தப் படத்தில் அவர்தான் வில்லன். அந்த வில்லன் கதாபாத்திரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் அஜித் சிறப்பாக நடித்த வேடங்களில் அதுவும் ஒன்று.
'தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில்தான் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 'வாலி' படத்தில் அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிப்பது தமக்குப் பெருமையாக இருப்பதாக நடிகை அனுஷ்கா அண்மையில் பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அஜித் அளவிற்கு தன்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் தன்னால் முடிந்த அளவிற்கு அவரைப்போல நடிக்க முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தற்பொழுது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்க சுதீப், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது அனுஷ்காவுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் காலில் அடிபட்டதகாவும் தகவல் பரவியது. இதனால் சினிமா உலகம் பரபரப்பாகி அனைவரும் அனுஷ்காவை நலம் விசாரிக்கத் தொடங்கினர்.
உடனே அனுஷ்கா, "எனக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன்," என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவருக்கு சிறிய அளவில் விபத்து ஏற்பட்டதாகவும் ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவரது 'இன்ஸ்டகிராம்' பக்கத்தில் நலமுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.