பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் சூர்யாவை வைத்து 'அஞ்சான்' படத்தை எடுத்தார். ஆனால் அந்தப் படம் நன்றாக ஓட வில்லை. அதனால் லிங்குசாமிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் விஷாலை வைத்து 'சண்டக்கோழி 2' படத்தை எடுத்தார். அந்தப் படமும் தோல்வி அடைந்தது. அதனால் பெரும் பணக்கஷ்டத்திற்கு உள்ளானார் இயக்குநர் லிங்குசாமி.
தொடர் தோல்விகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் லிங்குசாமி என்பதைக் கேள்விப்பட்டு லாரன்ஸ் அவரை அணுகி, "கதை ஒன்றைத் தயார் செய்யுங்கள். நான் நடித்துக் கொடுக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
நடிகர் விக்ரமும் இயக்குநரைத் தொடர்புகொண்டு, "நான் உங்களுடைய படத்தில் நடிக்கிறேன்," என்று சொல்லி இருக்கிறார்.
ஏற்கெனவே 'பீமா' படத்தை விக்ரமை வைத்து எடுத்தவர் லிங்குசாமி. அதோடு விக்ரம் தற்பொழுது ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்கள் என்று நடிக்கும் முடிவை எடுத்து, நடித்தும் வருகிறார்.
அதனால் தற்பொழுது இவர்கள் இருவரில் யாரையாவது வைத்து படம் எடுக்கும் முடிவுக்கு வந்து அவர்களுக் காக கதை எழுதும் வேலையில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
ஒருவரின் பணக்கஷ்டத்தில் பங்கு கொள்ள நினைக்கும் லாரன்ஸுக்கும் விக்ரமுக்கும் கோலிவுட்வாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

