அமலா பாலின் முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய் மருத்துவர் ஒருவரை மறுமணம் செய்ய இருப்பதாகவும் அவர் மணக்க இருக்கும் பெண்ணின் படத்தையும் அண்மையில் வெளியிட்டார். அவர் செய்தி வெளியிட்ட சில மணித்துளிகள் கழித்து அமலா பால் டுவிட்டரில் அவருக்கு பதிலடி கொடுப்பதுபோல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவை பலரும் பார்த்து வருகின்றனர்.
அமலா பால் தற்போது சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறார். இயக்குநர் விஜய்யிடம் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் தனது இரண்டாவது திரைப்பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை.
சிறு வரவுசெலவுத் திட்டப் படங்களில்கூட நடிக்கத் தொடங்கினார். எதையாவது செய்து விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று நினைத்தவர் 'ஆடை' என்ற படத்திற்காக ஆடையின்றி நடித்தார். அதுவே அவருக்குச் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வேங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். முறையான அறிவிப்புகள் வெளியான நேரத்தில் திடீரென அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார். ஆடையில் ஆடையின்றி நடித்ததால்தான் அவர் விலக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளருடன் அமலா பாலுக்குப் பிரச்சினை. அதன் காரணமாகவும் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இவரின் முன்னாள் கணவரும் இயக்குநருமான ஏ.எல்.விஜய்யின் திருமண அறிவிப்பு வேறு வெளியாகி உள்ளது. இவை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு தனது டுவிட்டரில் தனக்குத்தானே நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "நான் போராடுவேன், வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதிலிருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான் நடிக்கும் ஆடையின் கதையும்," என்று பதிவிட்டுள்ளார்.
அவர் மனவேதனையுடன் பதிவிட்டு இருப்பதைக் கவனித்த அவருடைய அன்பான ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக டுவிட்டரில் பதில் போட்டு வருகின்றனர்.

