திரையுலகை விட்டுத் தாம் விலகவில்லை என்றும், தொடர்ந்து நடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் சொல்கிறார் நடிகை மல்லிகா ஷெராவத்.
தற்போது கதாநாயகர்கள் தங்களது தோழிகளை நடிக்க வைப்பதால் தமக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் புலம்பியுள்ளார்.
"நான் இப்போதெல்லாம் பெண் உரிமை குறித்து அடிக்கடி பேசுகிறேன். எனவே எனக்கு வாய்ப்பளித்தால் படங்களிலும் இப்படித்தான் பேசுவேன் என எண்ணி கதாநாயகர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அவர்கள் தங்களது தோழிகளை நடிக்க வைப்பதால் எனக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன. இந்த வகையில் 30 பட வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன்," என்கிறார் மல்லிகா.
எனினும் இத்தகைய போக்கு தமக்கு வருத்தமளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்துப் பேசியபோது தமக்கு நாட்டுப்பற்று இல்லை என சிலர் தேவையின்றி விமர்சித்ததாகத் தெரிவித்துள்ளார். "சில நடிகைகள் என்னைத் தாக்கியும் பேசினார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்," என்கிறார் மல்லிகா.

