அல்லு அர்ஜுனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

அல்லு அர்ஜுனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

2 mins read
d8c0744f-0f7f-4dfc-911c-acf89fce4985
-

அல்லு அர்ஜுன் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஏ.ஆர்.முருகதாஸால் விரைவில் நிறைவேற இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் 'டோலிவுட்'டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இருந்தாலும் இதுவரையிலும் அல்லு அர்ஜுன் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பதாக இருந்தது.

அந்தப் படத்தின் அறிவிப்பு விழா சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பரமாக நடைபெற்றது. ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகு அந்தப் படத்தை எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் சற்றே வருத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது.

அல்லு அர்ஜுனின் அந்த ஆசையைத் தெரிந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் அவரது ஆசையை நிறைவேற்ற அருமையான கதை ஒன்றை அவரிடம் கூறினார். அல்லு அர்ஜுனும் உடனே ஒத்துக்கொண்டு, படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் எடுக்க இருக்கின்றனர். படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்கிறார். தெலுங்குப் படத்தை முன்னணி தெலுங்குப்பட நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டு விட்டார் தாணு.

ஏற்கெனவே தெலுங்கின் முன்னணி நாயகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரை வைத்துப் படங்களை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் இப்போது அல்லு அர்ஜுனும் இடம்பெற உள்ளார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் 'கேரவன்' என்று அழைக்கப்படும் படப்பிடிப்புத் தளத்தில் ஓய்வெடுக்கும் வண்டியை சுமார் 7 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது டோலிவுட்டில் அதிகமாகப் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகளில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர்தான் விலை உயர்ந்த சொந்த கேரவனை தங்களுடைய படப்பிடிப்புகளின்போது பயன்படுத்துகிறார்கள்.

அவர்களது வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் இடம்பிடித்துள்ளார். அவருடைய கேரவன் பற்றிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அதற்கு 'பால்கன்' என்று பெயரும் வைத்திருக்கிறார்.

நடிகர், நடிகைகள் படப்பிடிப்பின்போது பயன்படுத்தும் இந்த கேரவனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10,000 ரூபாய் வாடகையாகக் கொடுக்கப்படுகிறது.

2019-07-07 06:00:00 +0800