இனியா நல்ல நடிகை என்பது தெரியும். அவர் தமிழில் அறிமுகமான 'வாகை சூடவா' படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.
இனியா நல்ல இசை ஞானமும் உள்ளவர். மேலும் நடனத்தின் மீதும் தீராத காதல் கொண்டவராம். இதை நிரூபிக்கும் வகையில் காணொளியுடன் கூடிய ஓர் இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
'மியா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த இசைத்தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறாராம்.
"முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து இசைத்தொகுப்பாக வெளியிட்டுள்ளேன். இத்தகைய முயற்சிகள் நம்மை சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். மிக விரைவில் எனது நிறுவனத்தின் மூலம் திரைப்படமும் தயாரிக்க உள்ளேன்," என்கிறார் இனியா.
அவரது இசைத்தொகுப்பை டிவோ நிறுவனமும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.

