கோடம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது 'கடாரம் கொண்டான்'. இப்படத்தின் ஆக்கமும், விக்ரமின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாக மனந்திறந்து பாராட்டி உள்ளார் கமல்ஹாசன்.
ஆங்கிலப் படத்தின் சாயல் இருப்பதாக கமல் கூறியிருப்பதை பெருமையாகக் கருதுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"கமல் இவ்வாறு தெரிவிக்க, திரைக்கதை செல்லும் விதம், கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் விதம்தான் காரணம் என்பேன். இத்தனை பாடல்கள், இத்தனை சண்டைக் காட்சிகள் என்று இல்லாமல் கதைக் களத்தின் பிரம்மாண்டமும் கதாபாத்திரங்களின் வளர்ச்சியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
"நான் ஏற்றிருக்கும் கே.கே. கதாபாத்திரத்துக்கான தோற்றம் நிச்சயம் படம் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கும். சவாலை அக்கதாபாத்திரம் எதிர்கொள்ளும்விதம் ஸ்டைலாகவும் வேகம் நிறைந்ததாகவும் இருக்கும்," என்கிறார் விக்ரம்.
முக்கியமாக, துரத்தல் உள்ளிட்ட அதிரடிக் காட்சிகள் படம் பார்ப்பவர்களை அசர வைக்குமாம். பிரான்சில் இருந்து ஜில்ஸ் என்ற சண்டைப் பயிற்சியாளரை வரவழைத்து, அடிதடிக் காட்சிகள் யதார்த்தமாக, உண்மைத்தன்மையுடன் இருக்கும் வகையில் அமைத்துள்ளனராம்.
"அதே சமயம் நமது பாணி சண்டைக்காட்சிக்கான சுவாரசியங்களும் திரையில் தெரிய வேண்டும் என்று கேட்டதால் அந்த அம்சங்களையும் சேர்த்துக்கொடுத்திருக்கிறார் ஜில்ஸ். மலேசியாவில் மிக பரபரப்பான இடங்களில் உரிய அனுமதி பெற்று, கச்சிதமான திட்டமிடலுடன் காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
"மொத்தத்தில் இந்தக் காட்சிகள் சுடச் சுட பிரியாணி சாப்பிட்ட திருப்தியைத் தரும். அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளோம்," என்று சொல்லும் விக்ரம், அடுத்து 'துருவ நட்சத்திரம்' பட வெளியீட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறாராம்.
மேலும் ஒருகட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் படம் வெளியீட்டுக்குத் தயாராகி விடும் என்பதே விக்ரம் தரும் தகவல். மற்றொரு பக்கம் தனது மகன் துருவ் நடித்து வரும் 'ஆதித்ய வர்மா' படத்தின் வெளியீட்டையும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளாராம்.
அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இதுவரை 12 மில்லியன் பேர் இணையத்தில் ரசித்துள்ளதை பெருமையுடன் குறிப்பிடுகிறார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை எதிர் பார்க்கவில்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.
"திரைப்பட உருவாக்கம் தொடர்பான படிப்பிற்காகவே துருவ் லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியபின், படம் இயக்குவார் என்றுதான் எதிர்பார்த்தேன்.
"ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. நடிகனாகப் போவதாக கூறிவிட்டார். அதன்பிறகு 'ஆதித்ய வர்மா' படத்தின் அரங்கில் பார்த்தபோதுதான் என் மகனுக்குள் ஓர் இயல்பான நடிகன் இருப்பது தெரியவந்தது. அழுது நடிக்கும் சில காட்சிகளில் துருவ்வின் நடிப்பு என்னை மிரள வைத்தது.
"காட்சி முடிந்த பிறகும் அழுதுகொண்டே இருந்தார். அந்த மனநிலையில் இருந்து அவரை வெளியே கொண்டுவருவது இயக்குநருக்குப் பெரும் சிரமமாக இருந்தது.
"நடிப்பு குறித்து என் மகனிடம் உள்ள அளவுகோல் வியப்பைத் தருகிறது. இது அவர் படித்த சினிமா படிப்பால் வந்ததா, இல்லை என் மூலமாகக் கொஞ்சம் வந்ததா? என்று தெரியவில்லை," என்கிறார் விக்ரம்.
தனது ரசிகர்களைப் பற்றிப் பேசும்போது விக்ரம் முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஒருசேர தென்படுகிறது. தாம் ஏதும் கூறாமலேயே பலருக்கும் பல்வேறு உதவிகளைச் செய்யும் ரசிகர்களைப் பாராட்டுகிறார்.
"அப்படிச் செய்யும் உதவிகள் எதற்கும் சிறிய அளவில்கூட விளம்பரம் தேடிக்கொள்வதில்லை. "அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் இதுதான். இந்த நல்ல செயல் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்கிறார் விக்ரம். 'கடாரம் கொண்டான்' வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.

