குணச்சித்திர நடிப்பால் தமிழ் சினிமாவில் பெயரெடுத்தவர் விஜி சந்திரசேகர். தற்போது இவரது வாரிசும் திரையில் அசத்த துவங்கி உள்ளார்.
லவ்லின் சந்திரசேகர் தமிழில் அறிமுகமான படம் 'ஹவுஸ் ஓனர்'. லவ்லின் என்பது பஞ்சாபி, சமஸ்கிருத பெயராம். அதீத மகிழ்ச்சி என்று அர்த்தமாம்.
"எனது பள்ளி, பட்டப்படிப்பு முழுவதும் துபாயில் இருந்தேன். அதனால் தமிழில் சரளமாகப் பேச வராது. எனினும் விஜியின் மகள் என்று வரும்போது தமிழ் தெரியவில்லை என்று சொன்னால் பெரும் தவறாகிவிடும். விரைவில் தமிழில் சரளமாகப் பேசி அசத்து
வேன்," என்கிறார் லவ்லின்.
மனோத்துவத் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவருக்கு அனைத்து வகை மனிதர்களையும் பிடிக்குமாம். அதன் காரணமாகவே இத்துறையை தேர்வு செய்தாராம்.
சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாலும் இப்போது தான் அதை வெளிப்படுத்த நேரம் வந்திருப்பதாகச் சொல்கிறார்.
"படிப்புக்குப் பிறகுதான் மற்ற விஷயங்கள் என்று அப்பா தெளிவாகவும் கண்டிப்புடனும் கூறி விட்டார். அதனால் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பை முடித்தேன்.
"எத்தகைய சவாலான வேடமாக இருந்தாலும் ஏற்று நடிக்க நான் தயார். அதே சமயம் எந்தவொரு படமாக இருந்தாலும் அதை என் பெற்றோருடன் அமர்ந்து பார்க்கும் வகையில், யாரும் முகம் சுளிக்காத வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
"எனது படத் தேர்வுகள் இந்த அடிப்படையில்தான் இருக்கும். அம்மாவைப் போலவே நல்ல நடிகை எனப் பெயரெடுக்க விரும்புகிறேன். அதுவே என் லட்சியம்," என்று சொல்லும் லவ்லினுக்கு எல்லா கலைஞர்களும் மிகவும் பிடித்தமானவர்களாம்.