அக்‌ஷரா: அப்பாவால் தீவிரமாக உழைத்தேன்

அக்‌ஷரா: அப்பாவால் தீவிரமாக உழைத்தேன்

2 mins read
5b5c8dba-abc0-414a-9573-d61adc293bc8
அக்‌ஷரா ஹாசன் -

'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்தது இனிய அனுபவம் என்கிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.

அண்மைய பேட்டி ஒன்றில் இப்படம் தொடர்பான அனுபவங்கள், தந்தை கூறிய அறிவுரைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் அக்‌ஷரா. திரைப்படங்களில் நடித்தாலும் இயக்குநராக வேண்டும் என்பதுதான் இவரது விருப்பம். நிச்சயம் ஒருநாள் தனது எண்ணம் ஈடேறும் என்கிறார். தற்போது படங்களில் நடிப்பதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாம். அடுத்து இணையத் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

"அஜித், தனுஷுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது விக்ரமுடன் இணைந்து நடித்த வகையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

"ஒரு திறமையான நடிகராக அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவரால் எத்தகைய கதாபாத்திரத்தையும் தன்வசப்படுத்த முடியும். அதைத் தனித்துவமிக்க கதாபாத்திர மாகவும் மாற்ற முடியும்.

"இதே வகையிலான திறமையையும் குணாதிசயத்தையும் எனது தந்தையிடமும் பார்த்துள்ளேன்.

"அமிதாப்பச்சன், அடுத்து என் தந்தை தற்போது விக்ரம் என திறமைசாலிகளுடன் பணியாற்றியது எனது அதிர்ஷ்டம். மூவருமே புதுப்புது கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவர்கள் முகத்தில் தென்படும் உற்சாகமும் குதூகலமும் ஆச்சரியப்பட வைக்கிறது.

"திரைத்துறையை ஆழமாக நேசிக்கிறார்கள். அதேசமயம் படப்பிடிப்பின்போது மிகவும் ஜாலியாக, விளையாட்டுத்தனமாக நடந்துகொள்ளும் விக்ரமையும் பார்த்தேன்," என்று சிரிக்கிறார் அக்‌ஷரா.

'கடாரம் கொண்டான்' படத்தில் நடிப்பதாக தனது தந்தையிடம் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக சொல்கிறார். ஏற்றுக்கொண்ட வேடத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம் கமல்.

"ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குத் தகுந்த நடிகை எனப் பெயரெடுக்க வேண்டும் என்றார் அப்பா. அதுமட்டுமல்ல, மானம் கெட்டுப் போய்விடக் கூடாது என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

"அந்த வார்த்தைகள் என்னைக் கடுமையாக உழைக்கத் தூண்டின. நான் திறமையான நடிகை என அவருக்காகவும் எனக்காகவும் நிரூபிக்க விரும்பினேன். அப்பா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டார். ஆனால் இதுவரை என்னிடம் எதுவும் கூறவில்லை. அவரைப் போல் வேறு யாரும் என்னை உற்சாகப்படுத்த முடியாது. அதேசமயம் என்னைப் பற்றி அதிகம் விமர்சிப்பதும் அவர்தான்."

தமது பெற்றோர் இருவருமே பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடும் அக்‌ஷரா, தனது இன்றைய வளர்ச்சிக்கு அவர்கள்தான் முக்கிய காரணம் என்கிறார்.

"ஷ்ருதி அக்காவுக்கும் எனக்கும் முடிந்தவற்றை எல்லாம் எங்கள் பெற்றோர் செய்துள்ளனர். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அதைச் சாதிக்கத் தூண்டுகோலாக இருந்தனர். இதனால் நம்மால் என்ன செய்யமுடியும், செய்யமுடியாது என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம் எனது பலவீனங்களையே எனது பலமான அம்சங்களாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.

"ஷ்ருதி அக்கா செய்வதை எல்லாம் நானும்் செய்ய இயலாது. இருவருக்கும் வெவ்வேறு திறமைகள் அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. எனக்கென சில இலக்குகள் உள்ளன," என்கிறார் அக்‌ஷரா.