இதுவரை பதிமூன்று படங்களை இயக்கி உள்ளார் சமுத்திரக்கனி. இவற்றுள் மிகச் சிறந்த படைப்பாக 'நாடோடிகள் 2' படத்தை தான் குறிப்பிட இயலும் என்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல படைப்பில் நடித்திருப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் அஞ்சலி.
இந்தப் படம் நிறைய உண்மைகளைப் பேசும் என்றும், ரசிகர்கள் கண்முன்னே திரையில் ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கும் என்றால், அவர்களின் பின்பக்கம் இன்னொரு கதை போய்க் கொண்டிருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி.
எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவராக சசிகுமார் நடித்துள்ளார். கதைப்படி அஞ்சலி அவரது நெருங்கிய தோழி.
"நானும் சசி சாரும் எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம். பரணியும் அதுல்யா ரவியும் நல்ல கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். வேலை நேரம் போக, மீது சமயங்களில் சமூகத்துக்காக போராடுறவர்கள் நாங்கள்.
"சின்ன சின்னப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும்போது, திடீரென ஒரு பெரிய பிரச்சினையில் சிக்குகிறோம். அதிலிருந்து வெளியே வர முடிந்ததா என்பதை திரையில் பாருங்கள்," என்கிறார் அஞ்சலி.
'நாடோடிகள்' படத்தில் காதல் என்றால், இதிலும் அன்புதான் அடித்தளமாம்.
"அன்பு செலுத்துவோர் நம்மைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனாலும் அந்த நொடிக்கான அன்பு என்பது உண்மை. எனவே யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதைத்தான் சொல்லி இருக்கிறோம்.
"அதைப் போன்று சொல்லாமலேயே கடந்து போன ஒரு காதலை சசி, என்னிடம் இருந்து எதிர்பார்க்கலாம். இக்காதல் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்," என்கிறார் அஞ்சலி.
படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கதையைச் சுமக்குமாம். அந்த வகையில் திரைக்கதை அமைத்துள்ளாராம் சமுத்திரக்கனி.
"ஒரு புள்ளியில் முடிந்து போவது போன்ற கதை கிடையாது. முழு படமுமே ஒரு பயணமாகத்தான் இருக்கும். மதுரைதான் கதைக்களம். மதுரையைச் சுற்றிய ஊர்களும் இருக்கும்.
"எனது கதாபாத்திரம் மிக இயல்பானது. அதனால் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். இருப்பினும் என்னை நம்பி வாய்ப்பளித்துள்ளார் சமுத்திரக்கனி சார். என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன்," என்கிறார் அஞ்சலி.
அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கப் போவது என்ன? எனும் கேள்வி எழும்போது, சாதிகள் இல்லாத மனிதம் என்று சொல்கிறோம் எனில், அதை நோக்கிய ஒரு பயணம் என்பதே இந்தப்படம் என்கிறார் சமுத்திரக்கனி. ஒரு நல்ல விஷயத்துக்கான முதல் அடியை எடுத்து வைப்பதாகவும் சொல்கிறார்.
"இயக்குநர் கே.பாலசந்தர் அடிக்கடி சொல்வார். ஒரே படத்தை இரண்டாவது முறை ரசிகன் பார்க்கும்போது பல விஷயங்கள் அவனுக்குப் புதிதாகத் தெரிய வேண்டும்.
"அந்தச் சூத்திரத்தை தான் இந்தப் படத்தில் பயன்படுத்தி உள்ளேன். ஒவ்வொரு படமுமே நமக்கு சவால்தான். அதற்காக இதுதான் உச்சம் என்று சொல்ல வரவில்லை.
"அதேசமயம் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, இது மிகச் சிறப்பானதாக இருக்கும். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளது," என்று பெருமையுடன் சமுத்திரக்கனி, இது 'நாடோடிகள்' படத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் தெளிவுபடுத்துகிறார்.
தனது இயக்கத்தில் படமாக விரிவடையும் புதுக்கதைக்கு 'நாடோடிகள் 2' என்று தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதாம். அதை உடனே செயல்படுத்தி உள்ளார். மற்றபடி இரு படங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காதாம்.
சரி... கதை என்ன?
"சமூகத்துக்கு தேவையில்லாத, சமூகத்தை பாதிக்கிற விஷயங்கள் நடக்கும்போது ஆங்காங்கே நாலு பேர் மட்டும் கொதித்தெழுந்து நிற்பார்கள் அல்லவா. அப்படிப்பட்டவர்களின் கதைதான் இந்தப் படம்.
"ஒரு சில இளைஞர்கள் இந்தச் சமூகத்துக்காக குரல் கொடுப்பார்கள். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் இந்தச் சமூகமே அவர்களை மதிக்காமல் போய்க்கொண்டு இருக்கும்.
"ஆணவக் கொலைகள் நடக்கும்போது சாதி இல்லை என்று சொல்லும் ஒரு கூட்டம், இந்தக் கொலைகளுக்கு எதிராகப் போராடுகிற ஒரு கூட்டம் என இரண்டும் இருக்கும். இது அவர்களைப் பற்றிய கதையாக இருக்கும்.
"சாதி அமைப்புகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதே சமயம், சாதிகள் இல்லை என்று சொல்லும் கூட்டம் அதிகமாகிவிட்டால், இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கிறது நின்று போகும். அந்தக் கட்டத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்," என்று திடமாக நெஞ்சுயர்த்திச் சொல்கிறார் சமுத்திரக்கனி.

