சில தடைகள், கடும் விமர்சனங்களை மீறி வெளியாகி இருக்கிறது 'ஆடை'. வெளியான பின்னரும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எனினும் வசூல் ரீதியில் எல்லாம் திருப்திகரமாக இருப்பதாகத் தகவல்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால், தொலைக்காட்சி புகழ் ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ளது 'ஆடை'.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா? என்று படக்குழுவிடம் கேட்டுள்ளார் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அவருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது போலும். இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
"ரம்யா, 'ஆடை' படத்தைப் பார்த்தேன். உங்கள் அற்புதமான நடிப்புக்கு வாழ்த்துக்கள். குறைந்த நேரமே வந்தாலும் உங்கள் நடிப்பு என்னை ஈர்த்தது. முக்கியமாக காமினி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்கள் உணரும்போதும், உடை மாற்றும் அறையில் நடக்கும் உரையாடலிலும் உங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருந்தீர்கள்.
"அமலா, 'ஆடை'க்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் கடின உழைப்பு தெரிகிறது.
"ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? உங்களுக்கும் இயக்குநருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
"இயக்குநராக, நடிகராக அல்ல, ஒரு ரசிகையாக, பெண்ணாக, பெண்களின் அம்மாவாக..." என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதையடுத்து 'ஆடை' இயக்குநர் ரத்னகுமார் பதிலளித்துள்ளார். அதில், நேரடி விவாதத்துக்கு தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் எப்போதும் விவாதத்துக்குத் தயார். அமலாபாலும் தயார். ஆனால் உங்களுக்கு விருப்பம் இருப்பின் அதை நாம் காணொளியாகப் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்," என்று ரத்னகுமார் கூறியுள்ளார்.
'ஆடை'யைத் தொடர்ந்து அமலா பால் யாருடைய படத்தில் நடிக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. படம் வெளியாகும் வரை புது வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் எனும் முடிவுடன் காத்திருந்தாராம்.
அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப இப்படத்தில் அவரது நடிப்பைப் பலரும் பாராட்டி உள்ளனர். எனவே நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என நம்பிக்கையுடன் உள்ளாராம்.
இதற்கிடையே, படம் வெளியிடும் முன்பு ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது. அப்போது தனது சம்பளத்தில் கணிசமான பகுதியை விட்டுக் கொடுத்துள்ளார் அமலா.
கதாநாயகர்கள் தான் இப்படிச் செய்வது வழக்கம். அதைப் பின்பற்றி அமலாவும் இவ்வாறு பெருந்தன்மையுடன் செயல்பட்டதை தமிழ்த் திரையுலகத்தினர் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
'ஆடை'க்காக கடுமையாக உழைத்ததாகச் சொல்கிறார் அமலா. தமது கதாபாத்திரத்துக்காக ஆண்களின் உடல்வாகு தேவை என்று இயக்குநர் கூறியதை அடுத்து, உடற்பயிற்சிக் கூடத்திலேயே பல மணி நேரம் செலவிட்டாராம். பல்வேறு பெரிய மால்களுக்குச் சென்று மக்கள் எப்படி பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்பதை எல்லாம் கவனித்தேன்.
"எனக்கு யோகா என்றால் ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பயிற்சி செய்வதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. இவ்வாறு ஆடை என்னை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது," என்கிறார் அமலா பால். இப்போது தனது உழைப்புக்குரிய பாராட்டுகள் தேடி வருவது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. சிறு ஓய்வுக்குப் பிறகு அமலா மீண்டும் களமிறங்குவார். மேலும் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

