கோடம்பாக்க கதாநாயகிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அதே சமயம் வாய்ப்புகள் பெறுவதில் அவர்களுக்குள் ஒருவித ஆரோக்கியமான போட்டி நிலவவே செய்கிறது. அந்த வகையில் முதன்முறையாக நயன்தாராவும் ஜோதிகாவும் திரையில் மோத உள்ளனர்.
"நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகிறது 'கொலையுதிர் காலம்'. முந்தைய அறிவிப்பின்படி, படம் வெளியாகி இருந்தால் இன்று திரையரங்கில் அதைப் பார்த்திருக்க முடியும்.
ஆனால் இப்படத்தின் இந்திப் பதிப்பு தோல்வி அடைந்ததால் நிலைமையில் தலைகீழ் மாற்றம். 'கொலையுதிர் காலம்' விநியோக உரிமையை பெறுவதில் விநியோகஸ்தர்கள் மத்தியில் தொடக்கத்தில் போட்டி நிலவியது.
நயன்தாரா நடித்த, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வெற்றி பெற்றதால் 'கொலையுதிர் காலம்' படத்துக்கும் தொடக்கத்தில் வரவேற்பு இருந்தது. சில காரணங்களால் படம் முழுமையடைய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது. இதனால் வேறு சிக்கல் ஏற்படுமோ என்று விநியோகிப்பாளர்கள் தயங்கினர்.
இந்நிலையில் இப்படம் இந்தியில் மறுபதிப்பானது. 'காமோஷி' என்ற தலைப்பில் உருவான அதில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். ஜூன் 14ஆம் தேதி வெளியான இப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் எதிரொலியாக தமிழ் பதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் நேற்று வெளியாக வேண்டிய படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆகஸ்ட் 2ஆம் தேதி சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள 'ஜாக்பாட்' திரைப்படம் வெளியாகிறது. இதனால் நயன்தாரா, ஜோதிகா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோத உள்ளன.
"என்னதான் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டாலும், இதுகுறித்து விநியோகிப்பாளர்கள் தரப்பில் எந்தவிதக் கவலையும் இல்லை.
"முன்பு 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி வசூல் அள்ளவில்லையா? தரமான படங்கள் வெற்றி பெறும்," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள்.

