மானபங்கம் நகைப்புக்குரியதா? சின்மயி கண்டனம்

மானபங்கம் நகைப்புக்குரியதா? சின்மயி கண்டனம்

1 mins read
04b3911e-1868-4281-988a-b18504d4a50e
-

பெண்களை உரசுவதற்காகவே பேருந்துகளில் பயணம் செய்வதாக நடிகர் சரவணன் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியதைப் பாடகி சின்மயி கண்டித்திருக்கிறார்.

"பெண்களை மானபங்கப்படுத்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதாக ஆடவர் ஒருவர் பெருமிதத்துடன் கூறியதைத் தமிழ் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. இவர் கூறியதற்குப் பார்வையாளர்கள் கைத்தட்டியும் உள்ளனர். இது ஒரு வேடிக்கை. பார்வையாளர்களுக்கு. கைத்தட்டும் பெண்களுக்கு," என்று அந்தப் பாடகி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாரத்தின் முற்பகுதியில் இயக்குநர் சேரன் தன்னைப் பிடித்து இழுத்ததாக மாடல் அழகி மீரா மித்துன் கொடுத்த புகாரை நிகழ்ச்சி நெறியாளர் கமல்ஹாசன் விசாரித்தார். அப்போது கமல்ஹாசன், மீரா போல பேசிக்கொண்டிருந்தால் எந்தப் பெண்ணும் அரசு பேருந்தில் செல்ல முடியாது என்றும் பெண்களை உரச வேண்டும் என்பதற்காகவே சிலர் வருவர் என்றும் கூறினார். இதனை ஆமோதித்த சரவணன், தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவ்வாறு செய்திருந்ததாகவும் சிரித்துக்கொண்டே கூறினார்.

சரவணன் "அதையும் தாண்டி புனிதராகிவிட்டார்" என்று கமல்ஹாசன் பதிலளித்ததற்குப் பார்வையாளர்களும் போட்டியாளர்களும் கைத்தட்டினர்.

மானபங்கத்தைத் தொலைக்காட்சியில் பிரபலம் ஒருவர் இவ்வாறு சாதாரணமாகப் பேசியது குறித்து பலர் தங்களது கோபத்தையும் வருத்தத்தையும் தொடர்ந்து டுவிட்டரில் கண்டனங்களாக வெளிப்படுத்துகின்றனர்.