மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி

மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி

2 mins read
94767fc1-ae73-4bb2-9bc7-7da740ce2439
மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் நடிகை டாப்சி. படம்: ஊடகம் -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் நடிகை டாப்சி.

கிரிக்கெட்டில் இதுவரை 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6,720 ஓட்டங்கள் எடுத்து இருக்கிறார் மிதாலி ராஜ். இவரின் பயிற்சியாளர் ரமேஷ் பவர், மிதாலி ராஜ் மீது கொண்ட தனிப்பட்ட விரோதத்தால் இவரை போட்டியில் பலமுறை ஆட விடாமல் செய்தார். அதனால் இந்திய அணி பல தோல்விகளைச் சந்தித்தது. மிதாலி ராஜ், ரமேஷ் பவர் மீது புகார் கொடுத்தார். அதனால் ரமேஷ் பவர் உடனடியாக பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதற்குப்பிறகுதான் மிதாலி ராஜுக்கு மீண்டும் இந்திய மகளிர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்திய மகளிர் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ். இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றில்தான் டாப்சி நடிக்க இருக்கிறார். டாப்சி 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர், பின் 'பாலிவுட்' படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர் தனி கதாநாயகியாகவும் கலக்கி வருகிறார்.

"தமிழ், தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தேன். சிறந்த நடிகையாக என்னை அடையாளப்படுத்தியதும் தென்னிந்திய பட உலகம்தான். ஆனால் எனக்குள் இருக்கிற நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தது இந்தி படங்கள். இந்திப் பட உலகில் ஓய்வில்லாமல் இருந்ததால் தமிழ், தெலுங்கில் நடிக்க முடியவில்லை.

"ஆண்டுக்கு ஒரு தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கொண்டு வரும்போது ஒரு முன்னணி கதாநாயகன் கால்ஷீட் எங்களிடம் இருக்கிறது. நீங்கள் 2 மாதம் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள்.

"இப்போது தென்னிந்திய மொழிகளில் நான்தான் முதன்மைக் கதாநாயகியாக இருக்கிறேன். இந்திப் படங்களில் நடிக்க ஆறு மாதங்களுக்கு முன்பே நான் நாட்களை ஒதுக்கிக் கொடுத்து இருப்பேன்.

"திரைக்கதை பிடித்திருந்தால் எந்தப் படத்திற்கும் என்னால் தேதிகள் ஒதுக்கி நடிக்க முடியும். முன்னணி நடிகர்கள் என்பதற்காக என்னுடைய கால்ஷீட்டை கொடுக்க எனக்கு விருப்பம் கிடையாது. தொடர்ந்து என்னை வாழ வைத்த தென்னிந்திய படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறேன். விரைவில் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்குவேன்," என்றார் டாப்சி.

விஜய் சேதுபதி இலங்கை வீரர் முரளிதரன் பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து டாப்சியும் கிரிக்கெட்டர் வேடத்தை ஏற்க உள்ளார்.