ரசிகர்கள் எதை ஏற்றுக்கொள்வார்கள், எதை ஏற்க மாட்டார்கள் என்பதை யூகிக்கவே முடியாது என்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா மந்தனா.
இன்றைய தேதியில் தெலுங்கு தேசத்து இளையர்களை அதிகம் கவர்ந்துள்ள புது நாயகி இவர் தான். 'கிரிக் பார்ட்டி' தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர், அங்கு இரு வெற்றிகளை ருசித்த பின்னர் 'டியர் காம்ரேட்' மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.
நடிக்கத் தொடங்கியபோது ரசிகர்களுக்கு தனது முகம் நினைவில் நிற்குமா எனும் சந்தேகம் எழுந்ததாகக் குறிப்பிடுபவர், முதல் பட வெற்றிக்குப் பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிவதாக உற்சாகத்துடன் சொல்கிறார்.
"ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணத்துடன்தான் நடிக்கத் துவங்கினேன். ஆனால் வெற்றி தானாக என் வழியில் வந்தது. ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டேன்.
"விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே விழக்கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன். முதல் படமான 'கிர்க் பார்ட்டி' என்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. 'கீத கோவிந்தம்' என்னைப் பிரபலப்படுத்தியது. ஒரே இரவில் நட்சத்திரமாக ஆகிவிட்டதாகவோ எல்லாம் அதிர்ஷ்டம் என்றோ நான் நினைக்கவில்லை," என்கிறார் ராஷ்மிகா.
ஒரு படத்தைத் தேர்வு செய்யுமுன் அதில் நடிப்பது ஒரு பிரபல கதாநாயகன், குறிப்பிட்ட இயக்குநர் என்றெல்லாம் யோசிப்பதே இல்லையாம். நடிக்க வந்தபோது இவரால் சோகக் காட்சிகளில் அழுது நடிக்க முடியாது என்று சிலர் நையாண்டி செய்தனராம். ஆனால் 'டியர் காம்ரேட்' மூலம் அந்தக் கேலிப் பேச்சுகள் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்.
படத்தில்தான் இவரை சோகமாகப் பார்க்க முடியும் என்றும் நிஜ வாழ்க்கையில் அப்படி பார்க்க இயலாது என்றும் சொல்லும்போது ராஷ்மிகா முகத்தில் அப்படியோர் உற்சாகம்.
"நம்புங்கள், உண்மைதான்! என்னைச் சோகமாகவே காண முடியாது. என்னுடையது சிரித்த முகம் என்று எல்லாரும் சொல்கிறார்கள். எப்போதும் புன்னகையை ஏந்தி இருப்பது நம்மை மட்டுமல்ல, நம்மைக் காண்பவர்களையும் மகிழ வைக்கும்.
"தமிழில் விஜய்யுடன் ஒரு படம், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படம் என முன்னணிக் கதாநாயகர்களுடன் கைகோத்திருக்கிறேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையில்தான் பெரிய நட்சத்திரங்களின் படங்களை ஒப்புக்கொள்கிறேன்.
"எனக்குத் திறமை இருக்கிறது என நம்புகிறேன். நான் பிரபலம் என்பதை இன்னும் உணரவில்லை. இன்னும் பத்துப் படங்கள் கழித்து உணரலாம்," என்று பக்குவமாகப் பேசும் ராஷ்
மிகாவுக்கு, காட்சிப் பொருளாக வந்துபோகும் கதாநாயகி வேடம் என்பது அறவே பிடிக்காதாம்.
சாதாரணமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய மனம் வராது என்று குறிப்பிடுபவர், தம்மை ஒரு பெண்ணியவாதி என்றும் அழுத்தம் திருத்த
மாகச் சொல்கிறார்.
பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கத் தயங்க மாட்டாராம். அதே சமயம் தாம் தேர்வு செய்யும் எல்லாக் கதைகளிலும் பெண்ணியம் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் தமக்கு இல்லை
என்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை, கதை நன்றாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது அர்த்தமுள்ள விஷயத்தைச் சொல்ல வேண்டும், அவ்வளவுதான். நல்ல படங்களில் நடித்த பெருமை நமக்கு இருந்தால்தான் நமக்
காகப் படம் பார்ப்பவர்களும் பெருமைப்பட முடியும்.
"தமிழ் சினிமாவில் நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. இப்போதுதான் இங்கு நுழைந்து இருக்கிறேன். இங்கும் எனது இருப்பைப் பதிவு செய்வதில் எனது கவனம் இருக்கும். இதுவரை மக்கள் என்னைப் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தைத் தந்துள்ளனர். மிகுந்த ஈடுபாட்டுடன் அதில் நடிக்கிறேன்.
"இப்படியொரு கதாபாத்திரம் அமைந்தது எனது அதிர்ஷ்டம்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா மந்தனா.

