உதயராஜ், அவந்திகா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ரீல்'. முனுசாமி இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே புதுமுகங்களை நம்பி உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் இந்தப் படமும் இணைந்துள்ளது.
இது காதலும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகும் படமாம். கோவை, கோத்தகிரி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
நாயகன், நாயகி இருவரும் புதுமுகங்கள் என்றாலும் அனுபவ நடிகர்களைப்போல் அசத்தி உள்ளனராம். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சிரிக்க வைத்த சரத், இதில் நகைச்சுவை கலந்த குணசித்திர கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளதாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.
சந்தோஷ் சந்திரனின் பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை வழங்குகிறார்.
"அன்று முதல் இன்று வரை இளையர்கள் காதலின் வசம் ஈர்க்கப்படுவது குறையவில்லை. காதல் என்பது எக்காலத்திலும் நீடித்து நிலைத்திருக்கும்.
"இந்தப் படமும் காதல் கதையைத்தான் சொல்கிறது. எனினும் இன்றைய சூழலுக்கும் காலமாற்றங்களுக்கும் ஏற்ப கதை சொல்கிறோம்.
"அதனால் இளையர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும். மிக விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் முனுசாமி.
காதல் கதை என்றாலும் சில அதிரடி காட்சிகளும் இடம்பெற்று உள்ளனவாம். அனைவரும் திரை அரங்கிற்கு வந்து இப்படத்தை பார்க்க வேண்டும் என படக்குழு வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

