ஜெயம் ரவி: ரசிகர்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வருகிறது 'கோமாளி'

ஜெயம் ரவி: ரசிகர்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வருகிறது 'கோமாளி'

3 mins read
81ddb6a0-74ed-4bc8-b171-73f1e0509f1d
ஜெயம் ரவி, ராஷி கன்னா, படம்: தமிழகத் தகவல் சாதனம் -

ரசிகர்களின் ரசனைக்கு இரு விஷயங்களே முக்கிய காரணம். ஒன்று அவர்களை யோசிக்க வைக்கவேண்டும். மற்றொன்று சிரிக்க வைக்கவேண்டும். "என் மூளைக்கு வேலை கொடு அல்லது சிரிக்க வை". இதுதான் ரசிகர்களின் சித்தாந்தம். நான் நடித்துள்ள 'கோமாளி' படம் ரசிகர்களை ஒருசேர சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும் என்று கூறுகிறார் ஜெயம் ரவி.

இந்தப் படத்துக்கான விளம்பர வேலைகளில் பரபரப்பாக இயங்கிவரும் ஜெயம் ரவி திரைச்செய்தி ஊடகத்திடம் கூறுகை யில், "பாட்டு, சண்டை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த வழக்கமான படங்கள் தற்போது குறைந்து வருகின்றன. அதெல்லாம் சரியான கலவையில் இருந்தால் மட்டுமே படம் வெற்றிபெறும்.

"ஒரு படம் சிறந்தமுறையில் வெற்றி பெறுவதற்கு கதை, இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று காரணிகளும் மிகவும் முக்கியம். இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து தராசுபோல் சரியான வீதத்தில் இருக்கவேண்டும். இதில் எந்த ஒன்று சரியாக அமையாமல் போனாலும்கூட படம் சரியாக எடுபடாது," என்கிறார் ஜெயம் ரவி.

"நல்ல கதை இல்லையென்றால் சிறந்த இயக்குநரால் ஒன்றும் செய்யமுடியாது. இவை இரண்டும் சிறப்பாக இருந்தாலும் திறமையான தயாரிப்பாளர் இல்லை என்றால் பாதி வழியிலேயே படம் நின்றுகொண்டு சென்று சேரவேண்டிய இடம்தெரியாமல் தட்டுத் தடுமாறும் என்கிறார் ஜெயம் ரவி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகும் 'கோமாளி' படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவரது 'கோமாளி' படமும் பிரபாஸின் 'சாஹோ' படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.

"ஈரான், பிரேசில் போன்ற நாடுகளில் அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் பார்ப்பதற்காக படங்கள் எடுப்பதில்லை. அந்நாட்டு மக்களைப் பற்றி உலக மக்கள் தெரிந்து கொள்வதற்காகவே படம் எடுக்கிறார்கள். நாமும் நம் மக்களைப் பற்றி உலக மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் படம் எடுக்க வேண்டும்.

"அதிலும் குறிப்பாக, மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுக்கும்போது அந்தப் படம் நிச்சயம் பேசப்படும். கூடிய சீக்கிரமே தமிழ்ப் படங்களும் உலகளவில் பேசப்படும் நிலை வரும்.

"நம் மொத்த வாழ்க்கையின் அனுபவத்தையும் ஒரே நாளில் அனுபவித்தால் எப்படி இருக்கும்? அதுதான் 'கோமாளி'.

"என் முதல் படமே 10 படத்திற்கு சமமாகத்தான் இருந்தது. அடுத்தடுத்து வந்த என் ஒவ்வொரு படமும் அப்படித்தான் இருந்தது. சவால்களை சந்தித்துதான் முன்னுக்கு வரவேண்டி உள்ளது.

"கோமாளி' படத்தில் பள்ளி மாணவனாக நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சி மூலம் 18 கிலோ வரை குறைத்தேன். மாணவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டு நிமிடம் மட்டுமே வந்தால், வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், 15 நிமிடங்கள் வரும்போது நானே நடிப்பதுதான் சிறப்பாக இருக்கும் என உணர்ந்தே நடித்தேன்.

"எனது கனவுப் படம் என்று எதுவுமில்லை. அப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டால் அடுத்த படம் எடுக்கமுடியாமல் போய்விடும். என் ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக நினைத்துதான் வேலை செய்கிறேன். எதிர்காலத்தில் மூன்று படங்களாவது இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது.

"நான் செய்கிற விஷயம் வெளியே தெரிவது எனக்குப் பிடிக்காது. அது தேவையில்லாதது. அதேபோல் சினிமா பிரச்சினைகளை 'மைக்' போட்டு பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. பிரச்சினைகளை மறக்கவே ரசிகர்கள் சினிமாவுக்கு வருகின்றனர்; அந்த சினிமாவே பிரச்சினையாக இருந்தால் என்ன செய்வது? அதனால்தான் இந்த விவகாரங்களைத் தவிர்த்துவிடுகிறேன்," என்கிறார் ஜெயம் ரவி.