கேத்தரின்: மாடியில் இருந்து குதித்தேன்

கேத்தரின்: மாடியில் இருந்து குதித்தேன்

3 mins read
895872e7-63b9-438c-8425-98415fe8e998
கேத்தரின். படம்: ஊடகம் -

இதுவரை இல்லாத அளவிற்கு புதுப்படம் ஒன்றில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார் கேத்தரின் தெரேசா. அவர் இந்தளவு மனநிறைவுடன் குறிப்பிடும் படம் 'அருவம்'. அறிமுக இயக்குநர் சாய் சேகர் கைவண்ணத்தில் உருவாகிறது.

சித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தும் கதை அல்ல என்றாலும் தனக்கு ஓரளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் கேத்தரின்.

"இந்தப் படத்தில் எனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது. வழக்கமாக திகில் கதை, பேய்க்கதை என்றால் கதாநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக காட்டுவார்கள். அடிதடி ஆக்‌ஷன் படம் என்றால் பாடல் காட்சிகளில் வந்து போவதைத் தவிர கதாநாயகிக்கு வேறு வேலை இருக்காது.

"ஆனால் இந்தப் படத்தில் அப்படி அல்ல. எனது கதாபாத்திரம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும்," என்கிறார் கேத்தரின்.

கதைப்படி இரு தோற்றங்களில் காணப்படுவாராம். மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். தொடக்கத்தில் மாற்றுத் திறனாளியாக அமைதியான தோற்றத்தில் காணப்படுபவர், அந்தக் குறைபாடு நீங்கியதும் வேறு மாதிரி காட்சி அளிப்பாராம். அந்த இரு தோற்றங்களுமே ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார்.

"அடிதடி காட்சிகளும் உண்டு. ஆனால், நீங்கள் நினைப்பதுபோல கதாநாயகனைப்போன்று எல்லோரையும் அடித்துச் சாய்த்துவிட மாட்டேன். திடீரென படிக்கட்டுகளில் இருந்து கீழே விழச் சொல்வார் இயக்குநர். இல்லையெனில் உயரமான இடத்திலிருந்து குதிக்கச் சொல்வார். அதையெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காமல் செய்திருக்கிறேன்.

"இதற்கு இயக்குநர் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம்," என்று சிரித்தபடி சொல்கிறார் கேத்தரின் தெரேசா.

அவர் சொல்வதை இயக்குநர் சாய் சேகரும் ஆமோதிக்கிறார். கேத்தரினின் அர்ப்பணிப்பு தன்னை வெகுவாக கவர்ந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

"சில காட்சிகளில் அவரது நடிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விவரிப்பேன். அடிதடிக் காட்சிகளில் மாடியில் இருந்து குதிக்க வேண்டும் என்று சொன்னால்கூட மறுக்கமாட்டார்.

"இப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தபோது சில விஷயங்களைச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட காட்சிகளைப் படமாக்கியபோது அவர் முகத்தில் சின்னதாக ஓர் ஆச்சரிய ரேகை மட்டுமே தென்படும். அதற்கும் மேல் ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்.

"சில காட்சிகளில் நடிப்பது நிச்சயம் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கலாம். சில காயங்களும் பட்டிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் காரணம் காட்டி அவர் பின்வாங்கவில்லை. மிகவும் துணிச்சலாக நடித்துக் கொடுத்தார்.

"மொத்தத்தில் அவரது கதாபாத்திரத்தைத் திரையில் பார்க்கும்போது சற்றே சிறுபிள்ளைத்தனமான, அதேசமயம் சமூக அக்கறை உள்ள இளம்பெண்ணைப் பார்த்த உணர்வைக் கொடுக்கும்," என்று பாராட்டுகிறார் இயக்குநர் சாய் சேகர்.

சித்தார்த்துக்கும் கேத்தரினுக்கும் இடையேயான உடல்மொழி அசத்தலாக இருக்குமாம். நாயகியைப் போலவே நாயகன் சித்தார்த்தும் முழுமையாக ஒத்துழைத்ததாகத் திருப்தியுடன் குறிப்பிட்டார் அவர்.

"வழக்கமாக சித்தார்த் எந்த நடிகையுடன் இணைந்தாலும் அவர்களுடைய உடல்மொழி அம்சமாக இருக்கும். 'பாய்ஸ்' படத்திலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். இப்படத்தில் கேத்தரினுடன் அழகாக இணைந்துள்ளார்.

"படத்தின் இயக்குநர் என்பதால், நான் கொஞ்சம் அதிகப்படியாக பாராட்டுவதுபோலத் தோன்றும். ஆனால் படம் வெளியாகும்போது நான் சொன்னது உண்மை என்பதை நிச்சயமாக நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

"சித்தார்த் போலவே கேத்தரினும் கச்சிதமாக நடிக்கக் கூடியவர். இந்த உண்மை இதுவரை வெளிப்படாமல் போயிருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் அவர் தனித்துவத்துடன் தெரிவார். அது ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் சாய் சேகர்.