நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கவலை தெரிவித்துள்ளார்.
பெண்களும் சிறுமிகளும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது பலாத்காரத்துக்குப் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணவேண்டுமென்றால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தத் தேசம் இருளில் மூழ்கடிக்கப்படுவதை உணர வேண்டும்.
"இந்த இருளானது நம்மில் ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒரு வகையில் விழுங்கிவிடும். மன அழுத்தம், போதைப்பொருள், பலாத்காரம், உயிரை மாய்த்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை நம் இளையர்களைக் கொல்கின்றன.
"நாட்டிலுள்ள பல கோடி மக்களின் அகச்சிந்தனையில் உடனடியாக மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்," என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசர தேவையாக உள்ளது என்று குறிப்பிடுபவர், பெண்கள் நலனுக்காக புதுச் சங்கம் ஒன்றைத் துவங்க உள்ளாராம்.

