'அந்தக் காட்சியை நீக்குகிறோம்'

'அந்தக் காட்சியை நீக்குகிறோம்'

2 mins read
eed4b91c-2baa-4c10-a93a-431b0a2f9bc1
-

நடிகனாக அறிமுகமான முதல் நாளில் இருந்தே எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கக் கூடாது எனும் முடிவுடன் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார் ஜெயம் ரவி.

தனது புதுப்படமான 'கோமாளி'யில் ரஜினிகாந்த் குறித்து இடம்பெற்றுள்ள பகுதி நீக்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'கோமாளி'யில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பைக் கிண்டல் செய்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'கோமாளி' படத்தை ரஜினியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்தக் காட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயம் ரவி. ரசிகர்களைப்போலவே ரஜினியின் அரசியல் பயணத்தைக் காண தாமும் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

"அண்மையில் வெளியான 'கோமாளி' முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட ஒரு காட்சியில் தலைவர் ரஜினியின் ரசிகர்கள் மனதைப் புண்படுத்தி இருப்பது வருத்தமளிக்கிறது.

"எத்தகைய எதிர்மறை நோக்கமும் இல்லாமல் நல்ல எண்ணத்துடன்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. நானும் ரஜினி சாரின் தீவிர ரசிகன்தான். அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்," என்று தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

தாம் சிறு வயதில் ரஜினியின் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவரது அதிரடியும் ஸ்டைலும் ரசிகர்களின் வாழ்க்கையில் இயல்பாகவே ஓர் அங்கமாகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"ரஜினியையோ அவரது ரசிகர்களையோ அவமரியாதை செய்யும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது. 'கோமாளி' முன்னோட்டக் காட்சியைப் பார்த்த அவர், புதுமையாக சிந்தித்ததற்காக எங்கள் படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

"அவரது இந்தச் செயல்பாடுதான் முன்னை விட அவரை அதிகம் நேசிக்க வைக்கிறது. எனினும் அக்குறிப்பிட்ட காட்சி ரஜினி ரசிகர்களின் மனதைப் புண்படுத்தி இருப்பதால் எத்தகைய உள்நோக்கமும் இன்றி படமாக்கப்பட்டுள்ள அந்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்," என்று ஜெயம் ரவி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஜினியை கிண்டல் செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சி குறித்து நடிகர் கமல்ஹாசனும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்தே அக்காட்சியை நீக்குவது என 'கோமாளி' படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.