காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தில் இடம்பெறும் பல காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு கத்தரி போட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள படக்குழுவினர் மறுசீராய்வுக் குழுவை அணுக உள்ளனர். இது இந்தியில் வெளியான 'குயின்' படத்தின் மறுபதிப்பாகும்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 25 இடங்களில் ஒலி மற்றும் ஒளிக்குக் கத்தரி போட்டனராம்.
சில முக்கியக் காட்சிகளை நீக்கக் கூடாது எனும் தங்களது கோரிக்கையை மறு சீராய்வுக் குழு ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'குயின்' படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மறுபதிப்பு ஆகிறது. தெலுங்கில் தமன்னா நடிப்பில் 'தட்ஸ் மகாலட்சுமி' எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை' எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
கன்னட, மலையாளப் பதிப்புகளுக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக்குழு.
தமிழில் ஆட்சேபகரமான சில காட்சிகள் இடம்பெற்றதால் தான் கத்திரி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தணிக்கைக் குழுத் தரப்பில் கூறப்பட்டதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

