அதிர்ஷ்டமும் திறமையும் கைகொடுத்ததால் வாய்ப்புகிடைத்தது: அனன்யா

‘ஆடை’ படம் வசூல் ரீதியில் வெற்றியா தோல்வியா என்று தயாரிப்பாளர்தான் கவலைப்பட வேண்டும். ஆனால் ரசிகர்கள் உட்பட மற்ற அனைவரும் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில் அப்படத்தில் நங்கேலி கதபாத்திரத்தில் நடித்த அனன்யா ராம்பிரசாத், ‘அட, யார் இவர்?’ என்று படம் பார்த்த அனைவரும் கேட்கும் வகையில் கவனம் ஈர்த்துள்ளார். 

அனைவராலும் பாராட்டப்பட்ட இவர், படக்குழுவினர் தன்னை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்ததாகப் புகார் எழுப்பியுள்ளார். 

அதனால்தான் ‘ஆடை’ சம்பந்தமான எந்த நிகழ்விலும் தாம் பங்கேற்கவில்லை என்கிறார்.

“நிஜத்தில் மட்டுமல்லாது, திரையிலும் கூட எனது கதாபாத்திரத்தைத் திட்டமிட்டு மறைத்து விட்டனர். அதனால் மனதில் வருத்தம் இருந்தாலும் அமைதி காத்து வருகிறேன்,” என்கிறார் அனன்யா. 

இவருக்குச் சென்னைதான் சொந்த ஊர். தந்தை தனியார் நிறுவன ஊழியர். தாயார் நல்ல ஓவியர் என்றால், இவரது பாட்டனார் எழுத்தாளராம். பள்ளியில் படிக்கும்போதே நடனம், இசையில் அனன்யாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்தஆண்டுதான் படிப்பை முடித்திருக்கிறார். 

அச்சமயம் ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்புத் தேடி வந்ததாம். கல்லூரியில் இவரைவிட மூத்தவர்  இயக்கிய குறும்படம் அது. நன்றாக நடித்திருந்ததால், யூடியுப் அலைவரிசை ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததாம். 

அப்படியே நாடகங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். மேடையிலும் திரையிலும் நடிப்போம் என்று தான் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள எவரும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை என வழக்கம்போல் மற்ற நடிகைகளைப் போன்று கண்கள் விரித்து ஆச்சரியப்படுகிறார் அனன்யா. 

எனினும், குடும்பத்தார் இவரது விருப்பத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களாம். ‘ஆடை’யில் நடித்தது இவரது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

“கல்லூரியில் படித்தபோதே சினிமா வாய்ப்புத் தேடிவந்தது. ‘மேயாத மான்’ படத்தில் வைபவ் தங்கையாக இந்துஜா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தனர். ஆனால், நடிப்புத் தேர்வில் நான் தேறவில்லை,” என்று உண்மையைச் சொல்கிறார் அனன்யா. 

இதையடுத்து, நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதை இயக்கிய சிவகுமார் பாலசுப்பிரமணியம்தான் நடிப்பில் இவரது குருநாதர். அவரிடம் நடிப்பு தொடர்பான பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். அந்த அனுபவம் இப்போது வெகுவாகக் கைகொடுப்பதாகச் சொல்கிறார்.

அவரது  நாடகத்தைப் பார்க்க வந்த ‘ஆடை’ இயக்குநர் உடனடியாக அப்படத்துக்கான நடிப்புத் தேர்வுக்கு அழைத்தாராம். 

அதிர்ஷ்டமும் திறமையும் கைகொடுத்ததால் தமக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் அனன்யா.

“இயக்குநர் ரத்னகுமார் மிக நட்பாகப் பழகக் கூடியவர். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். அமலாபால் மேடமும் நல்லவிதமாகப் பழகினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தது.

“அதேசமயம் நடந்த விஷயங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்ட வருத்தம் குறித்தும் இப்போது பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல நடிகை என்று பெயர் வாங்கினால் அதுவே போதும். வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

“தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதே என் ஆசை. அவ்வாறு நடக்கும் என நம்புகிறேன்,” என்று சொல்லும் அனன்யா, சில கதை

களைக் கேட்டு வருகிறார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன். படம்: ஊடகம்

11 Dec 2019

நித்யா மேனன்: எல்லாத்துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது