'நடனம் கற்றுக்கொள்கிறேன்'

'நடனம் கற்றுக்கொள்கிறேன்'

2 mins read
70299396-46c3-4d17-9d81-298831800f0a
குச்சிப்புடி நடனம் கற்று வருகிறார் லட்சுமி மேனன் .  -

நடிகை லட்சுமி மேனன் தற்பொழுது உடல் இளைத்து முன்புபோல் அழகாகக் காட்சி அளிக்கிறார். இருந்தாலும் அவரை யாரும் படத்தில் நடிக்க அணுகாததால் தற்போது குச்சிப்புடி நடனம் கற்று வருகிறார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தமிழில் 'கும்கி' படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்து கலக்கி வந்தார். 'கொம்பன்', 'வேதாளம்', 'மிருதன்' என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. கடைசியாக இவர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக 'யங் மங் சங்' என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. பல வருடங்கள் ஆகியும் படம் இன்னும் வெளியாகவில்லை. அவர் உடல் பெருத்து காணப்பட்டார். அதனால் அவரை யாரும் படத்தில் நடிக்க அணுகவில்லை.

அதுபற்றி அவர் கூறுகையில், "தற்போது குச்சிப்புடி நடனம் பற்றிய படிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படித்து வருகிறேன். என் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌ஷயங்களைக் கற்றுக்கொண்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பும் எடுத்து வருகிறேன்.

என்னுடைய மாணவர்களின் அரங்கேற்ற நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிறைய கதைகள் வந்தன. ஆனால் எந்தக் கதையும் எனக்குப் பிடித்த மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் செய்யலாம் என்று நினைக்கிற கதாநாயகி நான் இல்லை. சில மாதங்கள் திரைப்படத்தை விட்டு விலகி இருப்பது உண்மைதான். கொஞ்சம் ஓய்வு எடுத்திருக்கேன். இந்த ஓய்வு நன்றாக இருக்கிறது," என்று கூறினார்.அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதுபோல லக்ஷ்மி மேனனுக்கு மறுவாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.