அஜித்துக்கு குவியும் பாராட்டுகள்

அஜித்துக்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
7bf5db23-c44c-4707-9211-f93a5ff7b12b
சமூகத்தில் நிலவும் அவலங்களை 'நேர் கொண்ட பார்வை' படம் பிடித்துக்காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். -

அஜித் நடித்திருக்கும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி கடந்த ஐந்து நாட்களாக வசூல் மழையை பொழிந்து கொண்டிருப்பது மட்டுமின்றி பெண்கள் உள்பட ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவையும் பெற்றுள்ளது. இதனையடுத்து ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து 'இப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடித்த அஜித்துக்கு 'ஹேட்ஸ் ஆஃப்' என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அஜித்துக்கு அவர் தொலைபேசியில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

'விஸ்வாசம்', 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அஜித்தின் படத்தை பார்த்து ரஜினி பாராட்டியுள்ளது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தில் ஜெயம் ரவியின் 'கோமாளி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்த திரையரங்குகளில் தற்போது 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த படத்தை தூக்க திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்து வருவதாகத் தெரிகிறது. எனவே 'கோமாளி' படத்திற்கான பெரும்பாலான திரையரங்குகள் கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் படகுழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் நாளில் தமிழகத்தில் ரூ.14 கோடி வரையில் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை இப்படத்தைக் கண்டு அஜித்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தைத் தவிர கர்நாடகாவில் இப்படம் ரூ.2.68 கோடி வரையில் வசூல் கொடுத்துள்ளது. இந்திய அளவில் வசூலில் இப்படம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சமூகத்தில் நிலவும் அவலங்களை 'நேர் கொண்ட பார்வை' படம் பிடித்துக்காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.