‘ஆணும் பெண்ணும் சமம்’

பெண்ணியம் என்றால் அது ஆண்களை வெறுப்பது அல்ல என்கிறார் நடிகை வித்யா பாலன்.

அண்மையில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’யில் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும், ரசிகர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டார் இவர். அதிலும், ‘அகலாதே’ பாடலில்  இசை மட்டுமல்லாமல், வித்யாவின் நடிப்பும் அருமை என விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.

தமிழில் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டால், கடந்த காலத்து கசப்பான அனுபவங்கள்தான் காரணம் என்று வித்யாவிடம் இருந்து பதில் வருகிறது.

“தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாகவே என் மனதில் இல்லை. இத்தனைக்கும் எனக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

“அதே சமயம் சில காரணங்களால் இன்னும் எத்தனை காலம்தான் தமிழில் நடிக்காமல் இருக்க முடியும். இந்த முறை நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டேன்,” என்கிறார் வித்யா.

இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தை தமிழில் மறுபதிப்பு செய்வதாக போனி கபூர் தெரிவித்த போது உடனே சம்மதித்தாராம். இத்தனைக்கும் எந்தப் படத்தையும் மறுபதிப்பு செய்யக் கூடாது என்பதே வித்யாவின் கொள்கை.  

அதையும் மீறி இப்படத்தில் நடிக்கக் காரணம் போனி கபூர் தன் மீது காட்டும் பாசம்தான் என்கிறார்.

“போனி கபூர் எப்போதுமே என்னிடம் அன்பாக நடந்து கொள்வார். மேலும் சிறு வயது முதலே ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பைப் பார்த்து வளர்ந்தவள் நான். 

“அவரிடம் நிஜ வாழ்க்கையில் மிகவும் நெருங்கிப் பழகும் தருணம் அமைந்த வேளையில் அவர் காலமானது மிகவும் வருத்தம் அளிக்கிறது,” என்று நெகிழ்கிறார் வித்யா.

இனி தமிழில் நடிக்க வேண்டாம் என்ற முடிவை மாற்றிக் கொள்ள வேறு ஏதும் காரணம் உண்டா?

“நாட்கள் கடந்து செல்லும்போது சிலவற்றை மறந்துதான் ஆக வேண்டும். இன்று நாம் இருக்கும் நிலைமைக்கு நமது கடந்த கால அனுபவங்கள்தான் பங்களிப்பு செய்துள்ளன என்பதை உணர வேண்டும்.

“மேலும், குறிப்பிட்ட சில அனுபவங்களை வைத்து ஒட்டுமொத்த திரையுலகத்தையும் நாம் குறைகூறக்கூடாது, புறக்கணிக்கவும் முடியாது.

பெண்ணியவாதி என்று தங்களை வெளிப்படுத்திக் கொள்ள சில நடிகைகள் தயங்குவது ஏன்?

“பெண்ணியம் குறித்த தவறான புரிதலே இதற்குக் காரணம். பெண்ணியம் என்றால் ஆண்களை வெறுப்பது அல்ல. இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

“பெண்ணியம் என்றால் ஒரு பெண்ணாகவும், தனிநபராகவும் தனது மதிப்பை உணர்வது. 

“அதன் மூலம் சவால்களை எதிர்கொள்வது,” என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார் வித்யா பாலன்.

ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிடுபவர், ஒருசிலர் மட்டும் இதை ஏற்காதது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்கிறார்.

“மீ டூ இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு நிலைமை ஓரளவு மாறி இருப்பதாகவே உணர்கிறேன். அதே சமயம் பெண்களும் தங்களுடைய  பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

“அதற்காகத்தான் பெண்ணியம் என்பது குறித்த புரிதல் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்கிறார் வித்யா பாலன்.

இந்தியில்தான் இவரது மார்க்கெட்  மதிப்பு அதிகம் என்றாலும், தமிழ் உட்பட பிற மொழிகளிலும் நல்ல கதா பாத்திரங்கள் அமைந்தால் நிச்சயம் நடிப்பாராம்.

கொசுறு: ‘நேர்கொண்ட பார்வை’யில் இடம்பெற்ற ‘அகலாதே’ பாடல்தான் வித்யா பாலனின் மனதைக் கவர்ந்த அண்மைய பாடலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும்   இனி மையாகவும் அருமையாகவும் இருந்ததாகப் பாராட்டுகிறார். 

இப்படிப் பட்ட நல்ல பாடல் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும் அற்பு தத்தை செய்யும் என்றும் சொல்கி றார் வித்யா பாலன்.