ஹிருத்திக் ரோஷன்: நற்குணங்களே ஒருவரை அழகாக்கும்

கான்களின் ராஜ்ஜியம் என அழைக்கப்படும் பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஹிருத்திக் ரோஷன், ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் அசாத்தியமாக வளைந்து நெளிந்து அவர் ஆடும் நடனத்திற்காகவே உலகெங்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 

உலகின் மிக அழகான ஆண் நடிகர் யார் என்ற வாக்ெகடுப்பில் உலகப் புகழ்பெற்ற பல ஆண் பிரமுகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உலகின் மிக அழகான மனிதரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை வாக்கெடுப்பு மூலம் நடத்தியதில் கிறிஸ் இவான்ஸ், டேவிட் பெக்காம், ராபர்ட் பேட்டின்சன் ஆகியோருடன் ஹிருத்திக்ரோஷன் பெயரையும் சேர்த்து இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் அழகிய ஆண் என ஹிருத்திக்கை தேர்வு செய்தனர். 

இந்த தகவல் வெளியானவுடன் உங்கள் அழகிய முகத்திற்கான ரகசியம் என்ன என்று அவரது   ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்ட கேள்விக்கு, “வேறு என்ன புரோக்கோலிதான்,” என கிண்டலாக பதிலளித்துள்ள ஹிருத்திக், அதேநேரம் முகத்தின் பொலிவு மட்டுமே அழகு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“உலகின் மிக கவர்ச்சி கரமான ஆணாக என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக எல்லோருக்கும் என் நன்றி.

“முகத்தின் அழகை வைத்து அழகானவரை தேர்வு செய்கின்றனர். 

“உண்மையில், நல்ல மனிதராக நடந்து கொள்வதும் நல்ல குணத்தோடும் மனிதாபிமானத்தோடு இருப்பதும் தான் ஒவ்வொருவருக்குமே அழகு. அப்படிப்பட்ட தகுதிகளோடு நான் இருப்பதாகவே உணருகிறேன்.

“எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக தோன்றினால் அதுவே உங்களை அழகானவராக காண்பிக்கும். அதனால் ஒவ்வொருவரும் நல்ல குணத்தோடு இருந்தாலே அழகுதான்,” என்று கூறியுள்ளார் ஹிருத்திக்.

பாலிவுட் நடிகைகள் சோனாக்சி சின்ஹா, சோனம் கபூர் என பல நடிகைகளும் ஹிருத்திக் ரோஷனின் அழகை வியந்து பாராட்டுவது வழக்கம். 

பல ஆண்களின் கனவுக் கன்னியாக அவரவர்களுக்கு பிடித்த நாயகிகள் இருப்பது போல் பெண்கள் பலரின் கனவு நாயகனான வலம் வருகிறார் ஹிருத்திக் ரோஷன்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கு கூட ஓர் ஆணின் அழகில் பொறாமை ஏற்படும் என்றால் அதற்கு பாலிவுட் நடிகரான ஹிருத்திக்கே  ஆகச்சிறந்த உதாரணம்.