விஜய்யின் வசனத்தைப் பேசி கலகலப்பூட்டிய ஷ்ரதா

பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷ்ரதா கபூர் நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ பட வசனத்தைப் பேசி நிகழ்ச்சிக்கு வந்திருந்த   பார்வையாளர்களை  கலகலப்பூட்டினார்.  

‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘சாஹோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இப்படத்தின் நாயகன் பிரபாசும் நாயகி ஷ்ரதா கபூரும் விழாவில் பேசினர். 

ஷ்ரதா கபூர் ‘போக்கிரி’ படத்தில் விஜய் பேசும் பிரபல வசனத்தைப் பேசிக்காட்டினார். 

‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அதுக்குப் பின்னால என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ என்ற அந்த வசனத்தை தனது பாணியில் பேசிக்காட்டினார். இதைப் பார்த்து பலரும் கைதட்டி ரசித்து சிரித்தனர். 

ஷ்ரதா மேலும் கூறியபோது, “சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. எல்லா நடிகைகளுக்குமே தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கும். எனக்கும் அப்படி ஆர்வம் இருந்தது. நிறைய வாய்ப்புகளும் வந்தன--. ஆனால் அவை எனக்கு ஏற்ற மாதிரி இல்லை. நாயகன்களுடன் ஆடிப்பாடும் வகையில், அவர்களை நினைத்து உருகும் வகையில் இருந்தது. இதுபோன்ற உப்புசப்பில்லாத பாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் நடித்தால் எனது பாத்திரத்துக்கு கதையில் உரிய முக்கியத்துவம் இருக்க வேண்டும், நடிக்க வாய்ப்பு இருக்கவேண்டும். அப்படியான கதைகள் அமையாததால் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவில்லை.

“என்னைப் பொருத்தவரை நாயகன் யார் என்பது பிரச்சினையே இல்லை. கதைதான் நாயகன் என்பதை உறுதியாக நம்புகிறேன். நல்ல கதை அமைந்தால் புதுமுக நடிகருடன் கூட நடிப்பேன். ‘சாஹோ’ படத்தில்  பிரபாஸ் அளவிற்கு எனக்கு முக்கியத்துவம் இருக்கிறது. 

“நானும் அவரைப்போல அதிரடி காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட் நாயகன்கள் நாயகிகளுடன் டூயட் பாடுவதில்லை. அவர்களுக்கு நிகராக சாகசங்கள் செய்வார்கள். அப்படித்தான் ‘சாஹோ’வில் நானும் செய்திருக்கிறேன்.

“இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம்,” என்று கூறியுள்ளார் ஷ்ரதா.