தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா

3 mins read
55dd1037-affa-4ae5-9422-f8dceae3f6ca
விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் இணைந்து நடிப்பது நல்லதொரு அனுபவத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தன்‌ஷிகா.  -

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் நடிகை சாய் தன்ஷிகா.

தற்போது விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் இணைந்து நடிப்பது நல்லதொரு அனுபவத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'லாபம்'. இது விவசாயிகளின் வாழ்வியல் குறித்துப் பேசுவதுடன், வெள்ளையர்கள் காலத்திலிருந்து இன்றுவரை விவசாயிகளின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் படமாகவும் இருக்குமாம்.

"அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று எந்தளவு வளர்ந்துள்ளது என்பதை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் பேசுகிறது இந்தப் படம்.

"இதில் நான் நடிக்கவேண்டும் என்று ஜனநாதன் கேட்டுக்கொண்டபோது கதையைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்றேன்.

"காரணம் அவர்மீது எனக்கு அந்தளவுக்கு அபார நம்பிக்கை உள்ளது. சினிமாவின் அரிச்சுவடியை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

"பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல் பல நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டேனோ, அதுபோலவே இப்போதும் நடந்து வருகிறேன்.

"காரணம், அவரிடம் கற்பதற்கு இன்னும் நிறைய உள்ளது," என்கிறார் தன்ஷிகா.

'பேராண்மை'க்குப் பிறகு தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், பெரிய இயக்குநர் என்றாலும் தான் முன்வைக்கும் சில யோசனைகள் சரியாக இருப்பின், அதைப் பரிசீலிக்கும் பெருந்தன்மை ஜனநாதனிடம் இருப்பதாகப் பாராட்டுகிறார்.

ஜனநாதன் இயக்கிய அனைத்துப் படங்களும் தமக்குப் பிடிக்கும் என்றாலும், 'ஈ', 'இயற்கை' ஆகியவை தம்மை அதிகம் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறார் தன்ஷிகா.

விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான பரிணாமங்களைச் சிறப்பாக வெளிப்படுத்துவதாகப் பாராட்டுபவர், 'லாபம்' படத்திலும் அவரது நடிப்பு மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார்.

"விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதுடன் நல்ல தயாரிப்பாளராகவும் நடந்து வருகிறார்.

"தனக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்து வருவதாக வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.

"இப்படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யூகிக்க முடிகிறது. கதாபாத்திரத்தைவிட கதைக்குதான் ஜனநாதன் முக்கியத்துவம் அளிப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.

"தற்போது பெண்கள் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களும் அத்தகைய படங்களைக் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் தன்ஷிகா.

'லாபம்' படம் சமூகத்திற்கு லாபம் தரும் படைப்பாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், காசு கொடுத்துத் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் திருப்திபடுத்தும் என்கிறார்.

"இன்றைய தேதியில் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் எந்த வகையிலும் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தரமான படமாக இல்லாவிட்டாலும் மோசமான படைப்பாக இருக்கக் கூடாது என்றே விரும்புகின்றனர்.

"ஜனநாதனின் படங்கள் எப்படிப்பட்டவை என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் படமும் அவரது தரமான படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்பதை விரைவில் ரசிகர்கள் உறுதி செய்வர்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சாய் தன்ஷிகா.