முதன்முறையாக சூர்யா, சிவகார்த்திகேயனின் படங்கள் திரையில் மோத உள்ளன. இதனால் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை இருதரப்பு ரசிகர்களுக்கும் பரபரப்பாகக் கழியும் என எதிர்பார்க்கலாம்.
'இரும்புத்திரை' மித்ரன் இயக்கும் படம் 'ஹீரோ'. இதில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பைத் துவங்கும் முன்பே இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியீடு காணும் என படக்குழு அறிவித்தது. வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீடு காணும்.
அதன் பிறகு புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் என ரசிகர்கள் மும்முரமாக இருப்பார்கள் என்பதால் கிறிஸ்துமஸ் வெளியீட்டிற்குப் பின்னர் பொங்கல் வரை புதுப் படங்கள் வெளியாகாது.
எனவே, 'ஹீரோ'வுடன் வேறு ஏதேனும் ஒன்றிரண்டு பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' கிறிஸ்துமஸ் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக சில தினங்களுக்கு முன் பேசப்பட்டது.
ஆனால், அந்தப் படம் இப்போதே வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறதாம். எனவே, கிறிஸ்துமஸ் வரை காத்திருக்காமல் செப்டம்பர் 20ஆம் தேதி களம் இறங்குகிறது.
இந்நிலையில் 'இறுதிச்சுற்று' சுதா கொங்கரா இயக்கி வரும் 'சூரரைப் போற்று' படத்தை கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியிட விரும்புகிறாராம் சூர்யா. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து தொழில்நுட்பப் பணிகளை விரைவாக முடித்து படத்தைத் தயார்படுத்துமாறு இயக்குநரிடம் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்.
இவ்வாறு சூர்யாவின் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாவது போல் சிவாவின் இரு படங்களும் வெளியீடு காண்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி சிவா நடித்துள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' வெளியாகிறது.
கடந்தாண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் 'மாரி-2', ஜெயம் ரவியின் 'அடங்க மறு', 'கனா', விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' ஆகிய 5 படங்கள் வெளியாகின. தற்போது 'சூரரைப்போற்று', 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய 2 படங்கள் மட்டுமே வருவதால் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சூரரைப்போற்று' படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி வருகிறார். 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று இரண்டு நாயகிகள் உள்ளனர்.

