யோகி பாபுவை பாராட்டும் பிரேம்ஜி

யோகிபாபுவைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் நடிகர் பிரேம்ஜி. அதிலும் ‘ஜாம்பி’ படத்தில் யோகிபாபு வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாகச் சொல்கிறார். 

‘ஜாம்பி’யின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு  பேசிய பிரேம்ஜி, தாம் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

“யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தின் பின்னணி இசைப் பதிவின்போது அவரது நகைச்சுவையைப் பார்த்து தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். 

“எனது அபிமான நடிகை யாஷிகா ஆனந்தும் இதில் நடித்துள்ளார். 

அந்த வகையில் இந்தப் படத்தில் இசையமைப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது,” என்றார் பிரேம்ஜி.

இப்படத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சி மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டுத் தெரிவித்தவர், ஒவ்வொரு படத்திலும் தனது பட்டப்பெயர் மாறிக்கொண்டே இருக்கும் என்றார்.

‘ஜாம்’பியில் இவரது பட்டப்பெயர் இசைக் காட்டேரியாம். எஸ்-3 பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். 

புவன் நல்லான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண்கிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய யாஷிகா, ஜாம்பிக்காக தினமும் மூன்று மணி நேரம் ஒப்பனைக்காக செலவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“இப்படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அவர் கடினமாக உழைத்தார். நடன இயக்குநரும் சிறப்பாக செயல்பட்டார். இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம்,” என்றார் யாஷிகா.
 

Loading...
Load next