‘இப்போது பயம் இல்லை’

சிவகார்த்திகேயனுடன் ‘மனங்கொத்திப் பறவை’யில் இணைந்து நடித்தது தமது அதிர்ஷ்டம் என்றும் அந்த அனுபவத்தை மறக்கவே இயலாது என்றும் சொல்கிறார் இளம் நாயகி ஆத்மியா. 

தொடக்க காலத்தில் கேமராவை கண்டாலே பயந்து நடுங்கிய தமக்கு, இப்போது அந்தப் பயம் ஓரளவு குறைந்துள்ளது என்கிறார்.

தமிழில் வாய்ப்பில்லாததால் மலையாளம் பக்கம் சென்ற ஆத்மியாவுக்கு அங்கு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ‘ஜோசப்’ என்ற மலையாளப் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அண்மையில் இவர் நடிப்பில் ‘மார்க்கோணி மத்தாயி’ என்ற படம் வெளியாகி உள்ளது. 

“விஜய் சேதுபதியின் நடிப்பில்  வெளியாகி உள்ள நேரடி மலையாளப் படம் இது. அங்கு நல்ல கதைகள் அமைவதால் தொடர்ந்து நடிக்கிறேன்,” என்று சொல்பவர், தற்போது தமிழில் ‘வெள்ளை யானை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் சமுத்திரகனிக்கு ஜோடி.

“இடையில் சில காலம் எங்கே போனீர்கள்? என்ற கேள்வியை நிச்சயம் கேட்பீர்கள். அந்த இடைவெளிக்கு  காரணம் படிப்பு. அப்படி என்ன படித்தீர்கள் என்று கேட்டால்,  பெரிதாக ஒன்றுமில்லை என்றுதான் சொல்வேன். 

“இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்பில் சேர முயற்சி செய்தேன். ஆனால் என் சகோதரிகள் வெளிநாட்டில் வசிப்பதால் அவ்வப்போது அவர்களைப் பார்க்கச் சென்றுவிடுகிறேன். 

”இதனால் நடிப்பையும் படிப்பையம் ஒருசேர தொடர முடியவில்லை,” என்று சொல்லும் ஆத்மியா தற்போது படிப்பைக் கைவிட்டுள்ளார். 

அதிக நேரம் ஓய்வு கிடைப்பதால் மலையாளம், தமிழ்ச் சினிமாவில் வாய்ப்பு தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

“இனி தொடர்ந்து நடிப்பேன். மலையாளத்தில் பல வாய்ப்புகள் தேடி வருகின்றன. தமிழைப் பொறுத்தவரை ‘வெள்ளை யானை’  படம் வெளிவந்ததும் கதை கேட்கலாம் என்பதே எனது முடிவு. 

”ஏனெனில் அந்தப் படம் எனக்கு நிச்சயம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுத் தரும். அத்தகைய வாழ்த்துகளை என் காதுகளால் கேட்ட பிறகே சென்னையில் முகாமிடுவேன்,” என்கிறார் ஆத்மியா.

“சமுத்திரகனியைப் பொறுத்தவரை தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. எத்தகைய கதாபாத்திரத்தையும் அவர் சுலபமாகக் கையாள முடியும். இயக்குநர் எழிலுக்குப் பிறகு சமுத்திரகனியிடம்தான் அதிக விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

“‘மனங்கொத்திப் பறவை’ படப்பிடிப்பின்போது கேமரா முன் நிற்கவே பயமாக இருக்கும். ஆனால், இயக்குநர் எழில்தான் எனக்கு பல வகையிலும் அறிவுரைகள் கூறி தைரியமூட்டினார். 

“படப்பிடிப்பின்போது சிவகார்த்திகேயடனுடன் அதிகம் பேசியிருக்கிறேன். அந்த அடிப்படையில் மிக நல்ல மனிதர், கலகலப்பானவர். தனக்கு எந்த மாதிரியான படங்கள்  பொருத்தமாக இருக்கும் என சரியாகக் கணக்கிட்டு நல்ல கதைகளில் நடித்து வருகிறார். இப்போது அவர் மிகப்பெரிய உயரத்துக்குச் சென்று விட்டார். அவருடன் நடித்ததை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

“கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வருவதற்கு வாய்ப்பளித்த படம் ‘வெள்ளை யானை’. முதன்முறையாக இப்படத்துக்காக பாவாடை சட்டை அணிந்து நடித்தேன்.

“வைக்கோல், கால்நடைகள் பராமரிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். இதுபோன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. 

“இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் தனுஷ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என ஒரு வெற்றிக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது பெருமை அளிக்கிறது,” என்கிறார் ஆத்மியா.

சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் என்று குறிப்பிடுபவர், அது பெரிய நகரமும் அல்ல, கிராமமும் அல்ல என்கிறார். 

“எனவே, விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளில் எனக்கு அவ்வளவாக அனுபவம் கிடையாது. ஆனால் இதுவோ முழுக்க விவசாயம் சார்ந்த கதை. அதனால் சில விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன் பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

“சமுத்திரகனி போன்ற அனுபவசாலிகளுடன் பணியாற்றும்போதுதான் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அதே போல் இயக்குநர் சுப்ரமணியம் சிவா பல அறிவுரைகளைக் கூறி ஆதரவாக இருந்தார்.

“இப்படி அனைவரும் என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதை மறக்கவே இயலாது. மீண்டும் இப்படியொரு கூட்டணி அமையாதா எனும் ஏக்கமும் மனதில் ஏற்படுகிறது,” என்று சொல்லும்போதே நெகிழ்ந்து போகிறார் ஆத்மியா. ‘வெள்ளை யானை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 

Loading...
Load next