புது படங்களில் பழைய நாயகிகள்

தமிழ்ச் சினிமா கதாநாயகிகள் குறித்து சிறிது காலம் ஏதும் தகவல் இல்லை என்றால் ரசிகர்கள் பலர் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கிவிடுகின்றனர். தங்களது அபிமான நாயகிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் சிலருக்குத் தூக்கமே வராது. சில காலமாக செய்திகளில் அதிகம் அடிபடாத சில நடிகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

வேதிகாவைத் தமிழில் பார்க்க முடியவில்லை. மாறாக தெலுங்கு, கன்னடப் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவரைப் போலவே தெலுங்கு தேசம் பக்கம் சென்ற இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் புதுப் படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் வேதிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தில் இவரைத் தவிர மேலும் ஒரு நாயகி உள்ளாராம். 

நடிகை வேதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக விரைவில் ஐரோப்பா பறக்கப் போகிறாரம் வேதிகா. 

உடல் இளைத்துவிட்டாலும் அதுகுறித்துப் புத்தகம் வெளியிட்ட பிறகும் அனுஷ்கா புதுப் படங்களில் அதிகளவு நடிக்காதது அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்தது. 

இந்நிலையில் தெலுங்கு, தமிழில் உருவாகி வரும் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்தில்  ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் அனுஷ்கா. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் சைரா நரசிம்ம ரெட்டிக்கு உதவும் வகையில் ஜான்சி ராணி வேடம் அமைக்கப்பட்டுள்ளதாம். 

அந்த வகையில் சிரஞ்சீவிக்கு இணையாக அரை மணி நேரம் திரையில் தோன்றுவார் அனுஷ்கா. இதற்காக அவருக்குப் பெரும் தொகை சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது.

‘தடக் தடக்’ இந்திப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. இந்தியில் வாய்ப்பில்லாததால் தென்னிந்திய  சினிமாவில் காலூன்ற நினைக்கிறாராம். 

அதுமட்டுமல்ல, ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டாதான் தமக்குப் பிடித்தமான நடிகர் என்றும் கூறியிருந்தார். அவ்வாறு சொன்னது வீண்போகவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கும் புது படத்தில் அவரைக் கதாநாயகியாக நடிக்க கேட்டிருப்பதாகத் தகவல். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதாம்.
 

Loading...
Load next