வெள்ளத்தில் சிக்கிய தனுஷின் நாயகி

தனுஷ் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘அசுரன்’ படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்கிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் அண்மையில் வெள்ளத்தில் சிக்கி காப்பாற்றப்பட்டார்.

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்புக்காக சென்ற படக்குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். ‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்து வருகிறது. 

திடீர் வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதுடன் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் தவித்து வருகின்றனர். விஷ்ணுவர்தன் தயாரித்துள்ள ‘பிங்கர் டிப்’ என்ற இணையத் தொடரின் அறிமுக விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

அதில் அவர் பங்கேற்காததுபற்றி அவரது சகோதரரும் நடிகருமான கிருஷ்ணா கூறும்போது, “இந்த படப்பிடிப்புக்காக இமாச்சலப்பிரதேசம் சென்ற என் அண்ணன் விஷ்ணுவர்தன் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை,” எனக் குறிப்பிட்டார். 

அவரைப்போல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேசத்தில் நடந்த மலையாள படப்பிடிப்பில் பங்கேற்க சென்று படக்குழுவினருடன் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். 

படப்பிடிப்பு நடத்த சத்ரா பகுதியும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் தனித்து விடப்பட்டுள்ளது. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. தொலைபேசிகளும் வேலை செய்யவில்லை. அதனால், நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட இந்தப் படக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களுடன் சுற்றுலாவுக்கு அங்கு வந்த 150க்கும் மேற்பட்டோரும்  சிக்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உதவியாக கிடைத்த சேட்டிலைட் தொலைபேசி மூலம் நடிகை மஞ்சு வாரியர் தனது தம்பி மதுவாரியரிடம் பேசினார். அப்போது தானும் படப்பிடிப்புக் குழுவினரும் ஆபத்தில் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளார். 

அவர்களிடம் உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து மது வாரியர், மத்திய அமைச்சர் முரளிதரனிடம் 

உதவி 

கோரியுள்ளார். 

அவர் இமாச்சலப்பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் மஞ்சு வாரியரையும் படக் குழுவினரையும்  பத்திரமாக மீட்டர்.

நடிகை மஞ்சு வாரியர் நிலச்சரிவுப் பகுதிக்குள் சிக்கிய செய்தி கேரளத் திரை உலகை உலுக்கி யிருக்கிறது.

Loading...
Load next