தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சினிமாவின் உச்சத்தையும் பாதாளத்தையும் சந்தித்த ராஜ்கிரண்

2 mins read
f12ae11b-4549-48fd-81f3-1569aa87f2a1
ராஜ்கிரண் -

திரைத்துறையில் எத்தனையோ பேர் வந்து போயிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ராஜ்கிரண். சினிமா எத்தனையோ பேரை வாழ வைத்திருக்கிறது. அப்படி சினிமாவால் சினிமாவுக்காகவே வாழும் நடிகர் ராஜ்கிரணுக்கு நேற்று பிறந்த நாள். அவரைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.

திரைத்துறையில் தனது 16 வயதில் காலடி எடுத்து வைத்தார் ராஜ்கிரண். 4.50 ரூபாய்க்கு தினக்கூலியாக விநியோக கம்பெனி ஒன்றில் எடுபுடியாக வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக படங்களை விநியோகிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.

70களில் ஏசியன் காதர் என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி என்ற நிலைக்குச் சென்று பின்னர் சரியாக நிர்வாகம் செய்ய முடியாமல் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றார் ராஜ்கிரண்.

அவருடைய முதலாளிகளே அவருக்கு மீண்டும் கைத்தூக்கிவிட படத்தயாரிப்பில் இறங்கினார் ராஜ்கிரண். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் இவரே தயாரித்து, நாயகனாகவும் நடித்து 'என் ராசாவின் மனசிலே' படத்தை வெளியிட்டார்.

பின்னர் 'அரண்மனைக் கிளி' படம் மூலம் இயக்குநராக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். நாளடைவில் விதவிதமான கதாபாத்திரங்களில் மிரட்டல், பாசம் என்று தந்தை வேடங்களுக்குத் தாவினார்.

இவருக்கு இனி தந்தை, நாட்டாமை போன்ற வேடங்கள்தான் என்று முடிவு செய்திருந்த நிலையில் ப.பாண்டி படத்தின் மூலம் மீண்டும் நாயகன் ஆனார்.தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலமாக திரையில் நாயகனாக அறிமுகமானார். தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்த பா.பாண்டியில் ராஜ்கிரண் மீண்டும் நாயகன் ஆனார்.

60 வயது முதியவர் படத்துக்கு நாயகனா? அதெப்படி சாத்தியமாகும்? படமெல்லாம் தேறாது என்று நினைத்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. 'பவர் பாண்டி' மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 60 வயதில் காதல், சண்டை, பாசம் என்று அனைத்தையும் கலந்து நடித்தார். படம் பலராலும் பாராட்டப்பட்டது.

இப்படிப்பட்ட படங்கள் ராஜ்கிரணுக்கு மட்டுமே கிடைத்த ஒன்று. படத்தில்தான் கோபக்காரர். ஆனால் உண்மையில் மிகவும் சாந்தமானவர். சினிமா இவரை உச்சாணிக் கொம்பிலும் வைத்தது, நடுத்தெருவிலும் நிறுத்தியது. ஆனாலும் சினிமாவை எப்போதும் காதலித்து வருகிறார்.

"நம்முடைய மனது என்ன நினைக்கிறதோ அதுதான் நிகழும்", "போராடினால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்," "நமக்கான இடம், நிச்சயம் நமக்காகக் காத்திருக்கும்," போன்ற வசனங்கள் எல்லாம் நடிகர் ராஜ்கிரணுக்கே உரியவை.