பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'சாஹோ'. இந்தப் படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே ஒரு குத்தாட்டம் ஆட ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.2 கோடி வாங்கி இருக்கும் செய்தி தற்பொழுது வெளியாகி மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்தின் வரவுசெலவு சுமார் ரூ.350 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. 'ஹாலிவுட்' படங்களுக்கு இணையாக வெளியான அந்த முன்னோட்டக் காட்சியைக் காணும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திலிருந்து சமீபத்தில் 'பேட் பாய்' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாட்ஷா, நீடி மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்த பாட்டிற்கு படுகவர்ச்சியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனமாடியுள்ளார். அந்த ஒரு பாட்டிற்காக மட்டுமே அவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய படங்களில் இதுவரை 'பாகுபலி' விற்பனையைப் போல இந்தப் படமும் சுமார் 500 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. அதுகுறித்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
மேலும் படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது இதுபோன்ற அதிக வசூலைக் குவிக்கும் படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளிநாடுகளில் முன்னோட்டக் காட்சிகளைத் திரையிடுவது வழக்கம். ஆனால், அதை இந்த முறை தவிர்த்துவிடலாம் என 'சாஹோ' குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
இதற்கான காரணம் என்னவென்றால், எதிர்மறையான விமர்சனங்கள் முதலில் வெளிவராது. மேலும், இந்தியாவில் முதல் காட்சி திரையிடுவதற்கு முன்பே வேறெங்கும் படத்தின் கதை என்ன என்பதும் தெரியவராது.
எனவே உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படத்தின் காட்சியை வெளியிட்டால் நிச்சயம் வசூலுக்கு பாதிப்பு வராது என்பதால் இப்படி திட்டமிட்டுள்ளார்களாம். எனவே கூடிய விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
படத்தின் நாயகன் இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில், அவரிடத்தில் அனுஷ்காவுடனான திருமணம் குறித்து மீண்டும் மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, "ஒரு சில மாதங்களில் இந்த திருமண வதந்தி காணாமல் போய்விடும் என்று நினைத்தேன். ஆனால், இது நானோ அல்லது அனுஷ்காவோ திருமணம் செய்து கொள்ளாதது வரை ஓயாதுபோல் தெரிகிறது. அதனால் அடுத்தமுறை அனுஷ்காவை சந்திக்கும்போது யாரையாவது சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்வேன்," என்று பதிலளித்திருந்தார் பிரபாஸ்.
அதையடுத்து இப்போது அவரிடத்தில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு பிரபாஸ் "எனது மாமா கிருஷ்ணம் ராஜூவிற்காக நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். அப்போதுதான் எனக்கு அரசியல் ஒத்துவராது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை.
"மேலும் நான் முழுநேர நடிகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் ரசிகர்களை மதிக்கிறேன். சினிமாவுக்காகவே வாழப்போகிறேன். சினிமா மூலம் மக்களை தொடர்ந்து மகிழ்விப்பதிலேயே எனது மகிழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறேன்," என்று வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாஸ்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரபாஸ் ரசிகர்கள் அவருக்கு 'பேனர்' வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் படத்தின் தணிக்கை வேலை முடியாத காரணத்தினால் படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், "ஒரு சாதாரண படம் வெளியாகிறது என்றாலே மிகவும் கவனமாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகுதான் வெளியிடும் தேதியை அறிவிப்பார்கள். அப்படி இருக்கும்போது இதுபோன்று ஒரு மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

