மூத்த தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி கலைஞானத்தின் பிறந்தநாள். அவரின் 90வது பிறந்த நாள் தமிழ்த்திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், "கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்," என்ற தகவலைச் சொல்லி அரசு சார்பில் வீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.
தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தருவதற்கு முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பேசும்போது, "அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு மிக்க நன்றி. ஆனால் அரசுக்கு அந்த வாய்ப்பைத் தரமாட்டேன்.
"கலைஞானம் வீடு இல்லாமல் இருப்பது எனக்குத் தெரியாது. அவருக்கு என்னுடைய சொந்தப் பணத்தில் வீடு வாங்கித் தருவேன். அவருக்கு ஏற்ற வீட்டை உடனடியாகப் பாருங்கள்," என்று பாரதிராஜாவிடம் கோரிக்கையும் வைத்தார்.
ரஜினியின் கோரிக்கையைத் தொடர்ந்து கலைஞானத்திற்காக உடனடியாக வீடு பார்க்கத் தொடங்கினார் பாரதிராஜா. ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டையும் கண்டுபிடித்து ரஜினியிடம் தகவல் தெரிவித்தார். தற்போது அந்த வீட்டை வாங்கி கலைஞானத்திற்கு வழங்கியும் விட்டார் ரஜினிகாந்த்.
ரஜினியை கதாநாயகனாக 'பைரவி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் கலைஞானம். மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக நல்ல லாபமும் சம்பாதித்தார். வேறு எந்தப் படமும் ரஜினிகாந்தை வைத்துத்தயாரிக்கவில்லை.
ஆனால் மற்ற படத்தயாரிப்புகளால் நஷ்டமடைந்த கலைஞானத்தை 'அருணாச்சலம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைத்து மிகப்பெரிய தொகையையும் கொடுத்தார் ரஜினிகாந்த். தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். இது தமிழ் சினிமா மட்டுமல்ல உலகின் எந்த மொழியிலும் சினிமாத் துறையில் நடக்காத ஒரு செயலாகும்.
'சொல்றதைத்தான் செய்வேன், செய்றதைத்தான் சொல்வேன்' என்பது சினிமாவுக்காக சொன்ன வசனம் மட்டுமல்ல, அவருடைய வழியும் அதுதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். கொடுத்த வாக்கை பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றிய சூப்பர் ஸ்டாரை கோலிவுட் பாராட்டி வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
'தர்பார்' படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் காவல் துறை ஐபிஎஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். 'தர்பார்' படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.
ரஜினிகாந்துக்குக் காவல் துறை சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து 'போட்டோ சூட்' நடத்திய புகைப்படம் இணையத்தளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்துக் காட்சிகளும் இப்படிச் சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று 'மீம்ஸ்' போட்டனர்.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்பைச் சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். கைபேசி கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் 'தர்பார்' படப்பிடிப்புக் காட்சிகளைத் திருட்டுத்தனமாக படம்பிடித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
நேற்று வெளியான படத்தில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்றுகொண்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் இதே ஊரில் படப்படிப்பை நடத்த உள்ளனர்.
இந்தப் படத்தின் படங்கள் தொடர்ந்து இணையத்தளத்தில் வெளியாகியுள்ள விவகாரம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது ஒருபுறம் இருந்தாலும் மாதாமாதம்
இதுபோன்று படத்தின் காட்சிகள்
வெளியாவது திட்டமிட்ட செயல்போல இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

