தமிழில் தற்போது நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் கயல் ஆனந்தி. அவற்றுள் 'எங்கே அந்த வான்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
விக்ரம் சுகுமாறன் இயக்க, சாந்தனுவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், மேலும் இரு புதுப் படங்களின் படப்பிடிப்பும் துவங்க உள்ளதாம்.
கிராமத்துப் பின்னணியிலான கதைக் களத்தில் நடிப்பது தமக்கு ஆத்ம திருப்தி அளிப்பதாக குறிப்பிடுகிறார் ஆனந்தி. தனது முக பாவம் தான் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்க காரணம் என்கிறார்.
"கிராமத்துக் கதைகளில் அதிகம் நடிக்கும் இளம் நடிகை அனேகமாக நானாகத்தான் இருப்பேன். 'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படத்திலும் நான் தான் நாயகி.
"கல்லூரி மாணவிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. அதுபோல, 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' படத்தில் வரும் எனது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வித்தியாசமாக இருக்கும்.
"இதுவும் நல்ல கூட்டணி. இயக்குநர் அதியன் ஆதிரை உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினரும் நல்ல நண்பர்களைப்போல் பழகினர். படப்பிடிப்பில் எல்லோரும் தோழர்களாகவே வாழ்ந்தோம். என்னைக்கூட எல்லோரும் 'தோழர்' என்றே அழைத்தனர்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஆனந்தி.
கதை கேட்கும்போது பின்னணி என்ன என்பதைவிட அந்த கதாபாத்திரம் எந்த வகையில் வித்தியாசமாக இருக்கிறது? ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? என்று மட்டுமே கணக்கிடுவதாகக் குறிப்பிடுபவர், தாம் நடித்த படங்களை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் போதும் இது சிறந்த படம் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார்.
அப்படிப்பட்ட படங்கள்தான் சிறந்த படைப்புகள் என்று குறிப்பிடுபவர், தமது படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்.
'மூடர்கூடம்' நவீனுடன் இணைந்து நடித்துள்ள 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில், ஆனந்தி சற்று பூசினாற்போல இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார்.
"இத்தாலியில் 40 நாட்களுக்கும் மேல் தங்கி முக்கிய காட்சிகள் எடுத்தோம். பொதுவாகவே இத்தாலி உணவு வகைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். நாற்பது நாட்களும் அந்த ஊர் உணவுகள், காபி, ஐஸ்கிரீம் என வெளுத்துக் கட்டினேன். அதனால் எடை சற்று கூடியுள்ளது. மற்றபடி கதாபாத்திரத்துக்காக மாறவில்லை," என்று விளக்கம் தருகிறார் ஆனந்தி.

