எம்.கே. தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த், வரிசையில் தமிழ்த் திரையுலகின் அடுத்த உச்ச நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) நடிகர் விஜய் கொண்டாடப்படுவார் என அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் விஜய்க்கு எழுதிய ஒரு கடிதம் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதில், தன் மகன் விஜய்யை சூப்பர் ஸ்டாராகக் கொண்டாட இந்த உலகமே காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தாய் என்பதையும் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட 'பிகில்'.
"அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில், இயங்குகையில், என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில், அதை எந்தப் பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்?"
"ரசிகர்கள் மத்தியில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?" என்று ஷோபா சந்திரசேகர் தமது கடிதத்தில் மேலும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

