வெற்றி தோல்விகள் தன்னை அதிகம் பாதிக்க அனுமதித்ததில்லை என்கிறார் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் உருவாகி உள்ள 'அசுரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தேறியது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், விருது கிடைத்தபோது குதிக்கவும் இல்லை; விருது கிடைக்கவில்லை என்று துடிக்கவும் இல்லை என்றார்.
'அசுரன்' படத்தைப் பொறுத்தவரை அதன் கதை மீது நம்பிக்கை வைப்பது முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், வெற்றிமாறனை நம்பி எந்த ஒரு படத்திலும் நடிக்கலாம் என்றார்.
"எனக்குரிய கதாபாத்திரம் மிக அருமையானது. 36 வயதிலேயே இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு நடிகருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு அமையுமா என்பது எனக்குத் தெரியவில்லை," என்றார் தனுஷ்.
'அசுரன்' தமிழ்த் திரையுலகின் முக்கியமான படமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்த படம் இது என்றார்.
வெற்றிமாறனும் அவரது குழுவினரும் தமக்கு நல்லதொரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தனுஷ் கூறினார். "மஞ்சு வாரியரின் திறமையை மிகவும் ரசிப்பேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது.
"'காதல் கொண்டேன்' படப்பிடிப்பின்போது சமயத்தில் நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்வேன்.
"அப்போது அவர், 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார்.
"அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர். அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை.
"சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது. அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது," என்று குறிப்பிட்டார் தனுஷ்.
"ஜி.வி. பிரகாசுடன் வேலை பார்ப்பது எப்பொழுதுமே ஜாலியான அனுபவம். இந்தப் படத்திற்கு மண் சார்ந்த இசையை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்," என்றார் தனுஷ்.
'வடசென்னை'தான் வெற்றிமாறனின் ஆகச் சிறந்த படைப்பாக இருக்கும் என்று நினைத்தாராம். ஆனால் அந்த எண்ணம் தற்போது மாறிவிட்டது என்றும், 'அசுரன்' படம் 'வடசென்னை'யை விடச் சிறந்த படைப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்துக்கு தாணு என்ற நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
"வெற்றி மாறன்தான் இயக்குநர் என்று அவரிடம் சொன்னபோது கதையே கேட்காமல் படம் தயாரிக்க முன்வந்தார். இந்த நம்பிக்கைதான் சினிமாவில் மிகவும் முக்கியம்.
"வெற்றிமாறன் மீது அனைவருக்குமே நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு படத்தில் நடிக்க நம்மை அழைத்தால் நிறைய விஷயங்களை நம் முன் வைப்பார். அவற்றைப் பின்பற்றி நடிப்பது சுலபமாக இருக்கும்," என்றார் தனுஷ்.
தற்போது உள்ள இளையர்களிடம் நிறைய திறமை குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.
'வெக்கை' என்ற நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'அசுரன்'. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
தமிழில் அவருக்கு இது முதல் படம்.

