எத்தனையோ உடைகள் வந்தாலும் புடவைக்கு ஈடில்லை - ரம்யா

எத்தனையோ உடைகள் வந்தாலும் புடவைக்கு ஈடில்லை - ரம்யா

3 mins read
8a0fe0d2-97c9-4274-be99-ad8840b16d7f
தனது திறமையை மதித்து தேடி வரக்கூடிய வாய்ப்புகளை தயக்கமின்றி ஏற்பதாகக் கூறுகிறார் ரம்யா பாண்டியன். -

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்தால் நிச்சயம் அதனை ஏற்கப்போவதாகக் கூறுகிறார் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஷெரின், தர்‌ஷன் ஆகிய இருவரையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். ரம்யாவுக்கு தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதியைத்தான் ரொம்பப் பிடிக்குமாம். தனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.

பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, ஒரு சிறுவன் இவரிடம் காதலைத் தெரிவிக்க முற்பட்டாராம். ஆனால் இதுவரை தமக்கு யார் மீதும் காதல் வந்ததில்லை என்கிறார். 'ஜோக்கர்', 'ஆண் தேவதை' என்று நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ரம்யா. அதனால்தான் படங்களுக்கு இடையே சற்று இடைவெளி ஏற்படுவதாகக் கூறுகிறார்.

"அந்தப் படங்களுக்குப் பிறகு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தது உண்மைதான். "ஆனால், கதைத் தேர்வில் நான் ரொம்ப கறாராக இருப்பதாகவும் அவ்வளவு சீக்கிரம் படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என்றும் சினிமா துறையைச் சேர்ந்த சிலர் தகவல் பரப்பிவிட்டனர்.

"இது குறித்து தாமதமாகத்தான் எனக்குத் தெரியவந்தது. தற்போது நிறைய கதைகள் என்னைத் தேடி வருகின்றன. விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன்," என்கிறார் ரம்யா. வணிக ரீதியிலான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ரம்யாவுக்கு இருக்கிறது. தாம் அத்தகைய படங்களில் நடிக்க முடியாது என்று மறுத்ததில்லை எனச் சுட்டிக் காட்டுகிறார்.

"நான் நடித்து கடைசியாக வெளியான இரு படங்களும் வித்தியாசமான கதைகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் சில எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும். ஆனால் வணிகரீதியான படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னது இல்லை.

"எந்த முன்முடிவும் இல்லாமல்தான் ஒரு கதையைக் கேட்பேன். பிடித்திருந்தால் நிச்சயம் அதில் நடிப்பேன்," என்று சொல்லும் ரம்யாவுக்கு, நடிகைகளில் ராதிகா சரத்குமார், சிம்ரன், அனுஷ்கா ஆகியோரை ரொம்பப் பிடிக்குமாம். இந்தியில் நடிகை பிரியங்கா சோப்ராவின் ரசிகை என்கிறார். திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பதுதான் இவரது முக்கிய பொழுதுபோக்கு.

"பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் படித்து வருகிறேன். ஹாலிவுட் இயக்குநர் சிட்னிலூமட், ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன்," என்று சொல்லும் ரம்யா, அண்மையில் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவற்றைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

"பொதுவாக, தங்களது நடிப்போடு சேர்த்து அழகும் கொண்டாடப்பட வேண்டும் என்றே நடிகைகள் பெரும்பாலும் விரும்புவார்கள். 'ஜோக்கர்' படத்தில் என் நடிப்பைக் கொண்டாடிய ரசிகர்கள், இப்போது அழகை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

"சினிமா வாய்ப்பு இல்லாதவர்கள்தான் வாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிடுவார்கள் என்ற விமர்சனத்தை ஏற்க இயலாது. திரையுலகில் இது வழக்கமான நடைமுறை தான்.

"'ஜோக்கர்' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்ததால், அதில் இருந்து மாற்றம் காட்டுவதற்காக மாடர்ன் உடையில் புகைப்படங்கள் எடுத்தேன். அதில் இருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகவே மீண்டும் புடவைக்கு மாறினேன்.

"எத்தனையோ உடைகள் வந்தாலும், புடவைக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதை இதன்மூலம் தெரிந்துகொண்டேன்," என்கிறார் ரம்யா பாண்டியன்.

சினிமா வாய்ப்புக்காக குறுக்கு வழிகளை நாடுவது, கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது எல்லாம் தமக்குப் பிடிக்காது எனச் சொல்பவர், தனது திறமையை மதித்து தேடி வரக்கூடிய வாய்ப்புகளை தயக்கமின்றி ஏற்பதாகக் கூறுகிறார்.

தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க ரம்யா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.