முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் 'மல்லி'.
வெங்கி நிலா இயக்கும் இப்படத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சு தீட்சித் நடித்துள்ளார். மேலும் டெலிபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ஜெ.வி.ஆர் மிரட்டியுள்ளார்.
"நாயகனும் நாயகியும் காதல் வயப்படுகிறார்கள். எனினும் பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
"தங்களிடம் அடைக்கலம் தேடி வரும் காதல் ஜோடிக்கு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். இருவரையும் ஒரு காட்டு பங்களாவில் தங்க வைக்கின்றனர்.
"இந்த மூன்று நண்பர்களின் உதவியால் காதலர்கள் ராஜா, ராணி போன்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்நிலையில் மர்மமான முறையில் இருவரும் உண்மையாகவே ராஜா, ராணியாக மாறும் வாய்ப்பு கிடைக்கிறது.
"சூழ்நிலை எப்படி மாறுகிறது? நண்பர்கள் என்ன ஆகிறார்கள்? ராஜா, ராணி ஆகும் இருவரும் எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களுடைய நாட்டு மக்கள் யார்? என்பதையெல்லாம் திரையில் பார்க்கும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
"ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளோம். காதலர்கள் புதிய சூழ்நிலையில் இருந்து பழைய நிலைக்குத் திரும்புகின்றனரா?
"அவர்களின் கடந்த காலம் என்ன ஆனது? என்பதற்கெல்லாம் படத்தின் இறுதிப்பகுதி உரிய விடைகளை அளிக்கும்," என்கிறார் இயக்குநர் வெங்கி நிலா.
இது முழுக்க முழுக்க திகிலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகி வருகிறதாம். ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக இருக்குமாம். இந்த ஒரு காரணத்தினாலேயே இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என தயாரிப்புக் குழு உறுதியாகச் சொல்கிறது.
"முக்கிய காட்சிகளை வேலூர், ஏலகிரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் படமாக்கி உள்ளோம். மல்லி வாசம் விரைவில் ரசிகர்களின் மனதை மயக்க வரும்," என்கிறார் வெங்கி நிலா.

