புகுத்தப்படும் கவர்ச்சியில் தமக்கு அறவே விருப்பம் இல்லை

புகுத்தப்படும் கவர்ச்சியில் தமக்கு அறவே விருப்பம் இல்லை

3 mins read
9c2bdbda-d974-4eed-9944-7d72ce9481eb
கவர்ச்சியாக நடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுபவர், தேவையின்றி புகுத்தப்படும் கவர்ச்சியில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார். -

மனோதத்துவம் படித்ததால் திரையுலகில் பல விஷயங்களை எளிதில் எதிர்கொள்ள முடிகிறது என்கிறார் நடிகை ரெஜினா. குறிப்பாக தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறதாம்.

"மனோதத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். இதனால் நமக்குத் தெரிந்த ஒருவரை எடைபோட முடிகிறது. மேலும் அவரது நடத்தை, குணாதிசயங்கள் குறித்து நன்கு தெளிவு பெற முடியும். "ஒருவரின் நடத்தை குறித்து தெரிந்தாலே அவரது குணாதிசயத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த வித்தை கைவசம் இருப்பதால் எனது கதாபாத்திரங்களை நன்கு உள்வாங்கி நடிக்க முடிகிறது. "இதனால் எனது நடிப்பை திரையில் மெருகேற்ற முடிகிறது," என்கிறார் ரெஜினா.

தெலுங்கில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து சிலர் கேட்கிறார்களாம். கதைக்குத் தேவையென்றால் எப்படியும் நடிக்கத் தயார் என்பதே ரெஜினாவின் பதிலாக உள்ளது. "நான் நடிக்க வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது. "எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். "இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். "அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது," என்கிறார் ரெஜினா.

தாம் நடிக்கும் படங்கள் தோல்வி அடைவது வருத்தம் அளிக்கும் எனக் குறிப்பிடுபவர், கடந்த கால அனுபவங்கள் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று அலசத் தூண்டுவதாகச் சொல்கிறார். "குறிப்பாக நான் என்ன தவறு செய்து இருக்கிறேன் என்று யோசிப்பேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னைப் பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன். ஒரு படம் தோல்வி அடையும்போது என்னால் அந்தப் படத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிந்திக்கிறேன். "சில சமயங்களில் நான் செய்தது சரி என்று நினைப்பேன். ஆனால் அது தவறாக முடிந்து விடும். சில சமயங்களில் விதிமுறைகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காக தயங்கினால் வேலைக்கு ஆகாது."

தற்போது திரையுலகத்து நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்திருப்பதாகச் சொல்பவர், சில முடிவுகளைத் தைரியமாகவும் வேகமாகவும் எடுக்க முடிகிறது என்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் தலா ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரெஜினா. "ஒரு கதைக்கு என்ன தேவையோ அதை தருவதுதான் நடிகர்களின் வேலை. படத்தில் நடிக்கும் முன்பு கதையை முழுமையாகக் கேட்கிறோம். எனவே அதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து முன்கூட்டியே நன்கு யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். "நடிக்க ஒப்புக்கொண்ட பின், கவர்ச்சி கூடாது, அழுகை கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது. என்னைப் பொறுத்தவரை, கதைக்குத் தேவை என்றால் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

"ஒரு நடிகையாக இவ்வாறு தைரியமாகச் சொல்ல முடிகிறது என்றால், நான் இதுவரை பெற்ற அனுபவங்களும் என்னை வழிநடத்திய இயக்குநர்களும் தான் முக்கிய காரணம். "எதற்கும் தயார் என்றால், அதிக கவர்ச்சி காட்டி நடிப்பீர்களா என்று கேட்கப்படுகிறது. உண்மையில் நான் அதற்கும் தயாராகவே இருக்கிறேன்," என்கிறார் ரெஜினா. கவர்ச்சியாக நடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுபவர், தேவையின்றி புகுத்தப்படும் கவர்ச்சியில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார்.

"ஓர் இளம் பெண்ணாக ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புவார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதற்காக எதையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறேன்.

"இந்தளவு வெளிப்படையாகப் பேசுவது எனக்குப் பிடித்திருக்கிறது. இதனால் ஒருசிலரிடம் எனக்கு ஆதரவு கிடைக்காது என்பது தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை," என்கிறார் ரெஜினா.

கொசுறு: வெளிநாட்டுப் பயணம் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். பயணங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார். ஆண்டுக்கு ஒரு முறையாவது வெளிநாடு சென்றுவர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம்.