தன்னுடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மிஷன் மங்கள்' இந்திப் படம் ஒரே வாரத்தில் நூறு கோடியை வசூலாக அள்ளிக் குவித்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை வித்யா பாலன். இப்படம் வெளியான பின், இந்தியாவில் எல்லா பெண்களும் 'சூப்பர் உமன்' ஆக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மிஷன் மங்கள்' படத்தில் 'மிஷன் மார்ஸ்' இயக்கத்தின் திட்ட இயக்குநர் தாரா ஷிண்டேவாக நடித்தேன். அவர் இந்தியாவில் பணிபுரியும் எல்லா பெண்களையும் போன்றவர்தான். அதாவது ஒரே நேரத்தில் வீட்டையும் அலுவலகப் பணியையும் நிர்வகிப்பவர். அவருடைய வேலைதான் அவரது அடையாளம். அதுவே தாராவுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். வேலையில் மிகவும் கவனமாக இருக்கும் தாரா, அதே அளவு பொறுப்புடன் வீட்டையும் கவனித்துக்கொள்வார். அப்படி அவர் இரண்டையும் கையாளும் விஷயம் எனக்குப் பிடித்தது.
"என்னைச் சுற்றி அப்படிப்பட்ட பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, நான் அந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்தியாவில் எல்லா பெண்களும் 'சூப்பர் உமன்' ஆக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடுத்தர வயது கதாநாயகிகளுக்குரிய கதைகள் உருவாகுவதில்லை என்று கூறப்படுவது தவறு. எனக்கு இப்போது வயது 40. இப்போதும் என்னை மையமாக வைத்துக் கதைகள் எழுதப்படுகின்றன.
கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சகுந்தலா தேவி வேடமும் இணையத்தில் வெளியாகும் தொடர் ஒன்றிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடம் ஆகியவையும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. நீனா குப்தா தற்போது சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் பிரதான வேடத்தில் தோன்றுகிறார். நாற்பது வயதைக் கடந்து விட்டால் தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பெண்கள் கருதியது எல்லாம் பழைய காலம். பெண்களே விழித்துக் கொள்ளுங்கள்," என்றார் நடிகை வித்யா பாலன்.

