பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை வைத்து படமெடுக்கும் இயக்குநருக்கு பொள்ளாச்சி குழுவிடமிருந்து மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதுவும் குறிப்பாக நவீன 'டிஜிட்டல்' யுகத்தில் தொலைபேசியால் வரும் பிரச்சினைகள் குறித்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் 'பேஸ்புக்' காதல் பற்றியும் 'கருத்துகளை பதிவு செய்' என்ற பெயரில் ஒரு படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தை ராகுல் பரமகம்சா இயக்கியிருக்கிறார். மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன், உபாசனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் ராகுல் பரமகம்சா கூறும்போது, "பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து பெண்களும் இப்படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும். இந்தப்படம் எடுத்தால் எனக்கு மிரட்டல் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தரவேண்டும் என்ற நோக்கில் எடுத்துள்ளேன்.
"பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்பே நான் படத்தை ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு நடந்த பொள்ளாச்சி சம்பவமும் எனது கதையும் ஒன்றுபோல் இருந்தது. அதனால் ஆரம்பத்தில் சில மிரட்டல்கள் வந்தன. அதன் பிறகு எதுவும் வரவில்லை.
"மீண்டும் வந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன். சில நல்ல விஷயங்களை சொல்லும்போது அதற்கு எதிர்ப்பு வருவது இயற்கைதான்," என்றார் இயக்குநர்.

