தீபாவளிக்கு முன்பு 10 படங்கள் வெளியீடு

தீபாவளிக்கு முன்பு 10 படங்கள் வெளியீடு

2 mins read
30fd98c6-529d-4285-a7e4-e8c69956b41c
'100% காதல்' படக்காட்சியில் ஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷ். படம்: ஊடகம் -

தீபாவளி வரப்போகிறது என்றால் புதுப்படங்களைக் கண்டு ரசிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் பன்மடங்காகப் பெருகிவிடும். இந்த எதிர்பார்ப்பை குடும்பமே கண்டுரசிக்கும் வகையில் படத்தின் கதைக்கருவும் வலுவாகவே அமைந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

அந்தவகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய்யின் 'பிகில்', கார்த்தியின் 'கைதி' ஆகிய இரு படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதேவேளையில் தீபாவளிக்கு முன்பே 10 பெரிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆர்யாவின் 'மகாமுனி', தனுசின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', யோகிபாபுவின் 'ஜாம்பி' ஆகிய மூன்று படங்களும் இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வருகின்றன.

'மகாமுனி'யில் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகிறது. 'ஜாம்பி' ரத்தக் காட்டேறிகளைப் பற்றிய நகைச்சுவை படம்.

சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் வருகிற 13ஆம் தேதியும் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா நடித்துள்ள 'காப்பான்' படம் 20ஆம் தேதியும் வெளியாகின்றன.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் 'அசுரன்', ஜி.வி.பிரகாசின் '100% காதல்' ஆகிய படங்களை அடுத்த மாதம் 4ஆம்தேதியும் விஷால் நடித்துள்ள 'ஆக்‌ஷன்' படத்தை 10ஆம் தேதியும் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.