கோலிவுட்டில் நடித்து பேரும் புகழும் பெற எனக்கு மலையளவு ஆசை உள்ளது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்கு வாய்ப்புகள் எதையும் தருவதில்லை.
அந்த வாய்ப்புகள் ஒருநாள் நிச்சயம் வரும் என்று காத்திருந்து காலத்தைப் பாழாக்காமல், பாலிவுட்டில் இருந்து வரும் வாய்ப்புகள் கைநழுவிப் போகாமல் அதை ஏற்று நடித்துவருகிறேன் என்று கூறியுள்ளார் டாப்சி.
அண்மைகாலமாக டாப்சிக்கு விளையாட்டு தொடர்பான படங்களில் நடிப்பதற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
'சூர்மா' என்ற இந்திப் படத்தில் ஹாக்கி பிளேயராக நடித்த டாப்சி அடுத்து 'சாத் கி ஆங்க்' படத்தில் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக நடித்தார்.
அடுத்து 'ராஷ்மி ராக்கெட்' படத்தில் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.
"கடந்த படம் விளையாட்டுப் படமாக அமைந்ததால் அடுத்து நடிக்கும் படம் வேறு கதைக்களத்தில் இருக்கவேண்டும் என்ற கணக்கெல்லாம் நான் பார்ப்பதில்லை. என்னைத் தேடி வரும் படங்கள் நல்ல கதை அம்சமுள்ள படங்களாக இருப்பதால் அவை என் கை நழுவிபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்," என்கிறார் டாப்சி.

