ஒரு பக்கம் பாடல்களை எழுதிக்கொண்டே மறுபக்கம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் பாடலாசிரியர் சினேகன். தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
இவர் தயாரிப்பில் ரமேஷ் மகாராஜன் இயக்கும் படம் 'பொம்மிவீரன்'. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளனராம்.
"அக்கலைஞர்களின் பல்வேறு பரிமாணங்களை விரிவாகக் கூறியுள்ளோம். மண்ணின் மணமும் குணமும் இயல்புகளும் மாறாமல் உணர்வுபூர்வமாக ஒரு நல்ல கதையை திரையில் காட்டியுள்ளோம்.
"கட்டைக்கூத்துக் கலைஞனாக அற்புதமாக நடித்துள்ளார் சினேகன். இதற்காக பல்வேறு சிறப்புப் பயிற்சிகளும் மேற்கொண்டார். அவரது மெனக்கெடல் நல்ல பலனைத் தரும்," என்கிறார் இயக்குநர் ரமேஷ் மகாராஜன்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நாட்டியாவுக்குத் தமிழில் இதுதான் முதல் படம்.
மேலும் கே. பாக்யராஜ், சிங்கம்புலி, ஊர்வசி, பவர் ஸ்டார் சீனிவாசன், முத்துக்காளை, சந்தானபாரதி உள்ளிட்டோரும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். பாடல்களுக்கும் சினேகனே பொறுப்பேற்றுள்ளார். இவரது வரி களுக்கு இசையமைப்பாளர் தாஜ் நூர் மண்வாசனையுடன் கூடிய இசையை வழங்கியுள்ளாராம்.
"வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு உணர்வுபூர்வமான கதையைச் சொல்ல முடிவெடுத்தோம். இந்த எண்ணம் தோன்றிய முதல் நாளில் தொடங்கி கடுமையாக, உண்மையாக உழைத்ததன் பலனாக நல்லதொரு படைப்பை உருவாக்கி உள்ளோம்.
"சினிமாவில் நடிப்பதால் பாடல்கள் எழுதுவது குறைந்து விட்டதாக எனது நலன் விரும்பி கள் கூறுகின்றனர்.
எனவே பாடல்கள் எழுதும் பணிக்கும் இனி கூடுதலாக நேரம் ஒதுக்குவேன். நடிப்பும் தொடரும்," என்று தெளிவாகச் சொல்கிறார் கவிஞரும் இயக்குநருமான சினேகன்.

